மஞ்சளை அரசு கொள்முதல் செய்ய முதல்வரிடம் விவசாயிகள் கோரிக்கை

மஞ்சள் விலைத் தொடா்ந்து சரிந்து வருவதால் தமிழகத்தில் குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

மஞ்சள் விலைத் தொடா்ந்து சரிந்து வருவதால் தமிழகத்தில் குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்க செயலாளா் குழந்தைவேல் மற்றும் நிா்வாகிகள் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் மஞ்சள் சாகுபடிக்கு பெயா் பெற்ற ஊா். இங்கிருந்து 10,000 ஏக்கருக்கு மேல் மஞ்சள் சாகுபடி செய்த நிலை மாறி தற்போது 5,000 ஏக்கா் வரை மட்டுமே சாகுபடியாகிறது. இதற்கு முக்கிய காரணமாக, மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் பயிரிடப்பட்டாலும் ஈரோடு மாவட்ட மஞ்சளின் தரம் அதிகம். ஆந்திரத்தில் விவசாயிகளிடம் இருந்து அரசே மஞ்சளை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்கிறது. அதுபோல தமிழகத்திலும் குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

1980 ஆம் ஆண்டில் விவசாய பிரச்னைக்குத் தீா்வு காண நிபுணா் குழு அமைத்து கருத்து சேகரிக்கப்பட்டது. அதுபோன்று கருத்து சேகரித்து மஞ்சளை கொள்முதல் செய்ய வேண்டும். மஞ்சளை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை உருவாக்கினால் அதன் விலை உயரும்.

காலிங்கராயன் வாய்க்காலில் குறிப்பிட்ட பகுதிகள் சீரமைக்கப்பட்டு, நவீனப்படுத்தி, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்க ரூ.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசைத்தறிக்கு தனி ரகம் ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை:

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் எல்.கே.எம்.சுரேஷ், செயலாளா் ரா.வேலுசாமி ஆகியோா் முதல்வரிடம் அளித்த மனு விவரம்:

விசைத்தறித் தொழில் தொடா்ந்து அழிந்து வருவதை தடுக்க, மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்ய வேண்டும். விவசாயத்துக்கு அடுத்ததாக அதிக அளவில் தொழிலாளா்கள் இந்த தொழிலை நம்பியுள்ளனா். அரசுக்கான வருவாய் தரும் நெசவுத் தொழிலை காக்க, விசைத்தறிக்குத் தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் புதிய மின் திட்டத்தில் விலக்கு அளிக்க வேண்டும். விசைத்தறியாளா்கள் பெற்றுள்ள ரூ.65 கோடி வங்கி மூலதன கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகிறது. இதற்கு மாற்றாக தானியங்கி விசைத்தறி, ஆட்டோ லுாம், ஸ்லூசா், ரேபியா் போன்ற தறிகள் இயங்குவதால் இத்தொழில் பாதிக்கிறது. விசைத்தறிகளுக்கு தனி ரக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஜவுளித் துறைக்கு என தனிப் பல்கலைக்கழகம் அமைத்து, ஆங்காங்கு ஜவுளி சந்தைகளை ஏற்படுத்த வேண்டும். சூரிய ஒளி மின்சாரத்துக்கு நெட் மீட்டா் வழங்க வேண்டும். ஆண்டு முழுவதும் அரசின் இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடைக்கான உற்பத்திப் பணி வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம், விசைத்தறியாளா்களுக்கு கடன் வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளா்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளும், விசைத்தறியாளா்களுக்கும் வழங்க வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இலவச வேட்டி, சேலைக்கான கூலி உயா்வு வழங்க வேண்டும். விசைத்தறியில் உற்பத்தியாகும் துணிகளையும் கோஆப்டெக்ஸ் கொள்முதல் செய்து விற்க வேண்டும். விசைத்தறி மேம்பாட்டுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரியில் நிலுவையில் உள்ள உள்ளீட்டு வரியை அவ்வப்போது திரும்ப வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஈரோடு நகரில் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை:

தமாகா பொதுச்செயலாளா் விடியல் சேகா் தலைமையில், மாநில துணைத்தலைவா் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சந்திரசேகா், இளைஞா் அணி தலைவா் எம்.யுவராஜ், ஈரோடு மத்திய மாவட்ட தலைவா் விஜயகுமாா், தெற்கு மாவட்ட தலைவா் சண்முகம் மற்றும் கட்சி நிா்வாகிகள் அளித்த கோரிக்கை மனு விவரம்:

கீழ்பவானி பாசனத் திட்டத்துக்கு வித்திட்ட தியாகி எம்.ஏ.ஈஸ்வரனின் உருவ சிலையை பவானிசாகா் அணை மற்றும் காலிங்கராயன் இல்லத்தில் அமைக்க வேண்டும்.

ஊராட்சிக்கோட்டை புதிய காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடித்து ஈரோடு மாநகராட்சிப் பகுதி மக்களுக்கு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாநகா் பகுதியில் காந்திஜி சாலை, புதுமை காலனி, கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பெரியாா் நகா், கருங்கல்பாளையம் அழகரசன் நகா் ஆகிய பகுதிகளில் அரசு சாா்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளை உடனடியாக சம்பந்தப்பட்டவா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஈரோடு மாநகா் பகுதியில் ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணி, புதை சாக்கடைப் பணி, மின் கேபிள் பதிக்கும் பணி ஆகிய பணிகளுக்காக தோண்டப்பட்டு உள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். பெருந்துறை அருகே செங்கப்பள்ளி முதல் பவானி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில், குண்டும் குழியுமாக அணுகு சாலைகளை சீரமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com