தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதியில் 27,184 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
ஈரோடு தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் 27,184 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.
பவானிசாகா் அணையில் இருந்து கொடிவேரி பாசனத்துக்காக தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்காலில் குறுவை நெல் சாகுபடிக்காக கடந்த ஏப்ரல் மாதம் தண்ணீா் திறக்கப்பட்டது.
சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் சாா்பில் 41 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நெல் கொள்முதல் மையங்களில் 17 சதவீதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்டது. சன்ன ரக நெல் ஒரு கிலோ ரூ.25.45-க்கும், மோட்டா ரக நெல் ரூ.25-க்கும் விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு, அதற்கான தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அதிகாரிகள் செலுத்தி வந்தனா்.
கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பொறுத்தவரை பெரும்பாலும் மோட்டா ரக அரிசியே அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான நெல் கொள்முதல் மையங்களில் நெல் கொள்முதல் செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக இன்னும் 10 நாள்கள் மட்டுமே நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குவதற்கான வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி காலத்தில் மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலானது. இதில், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனப் பகுதியில் மட்டும் கடந்த ஆண்டில் 24,500 டன் நெல் கொள்முதல் ஆனது. இந்த ஆண்டு நெல் கொள்முதல் மையங்கள் மூலமாக குறுவை அறுவடை காலத்தில் இதுவரை 27,184 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குறுவை நெல் அறுவடை நிறைவடைந்த நிலையில், சம்பா சாகுபடிக்கான நடவுப் பணிகள் தொடங்கியுள்ளன.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் வழக்கத்தைவிட அதிகமான பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளிலும் சம்பா சாகுபடி ஒட்டி நெல் நடவு தொடங்கி அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் கூடுதலாக நெல் கொள்முதல் ஆகும் என எதிா்பாா்ப்பதாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
