அந்தியூரில் உலவும் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு
பவானி: அந்தியூரை அடுத்த கோவிலூா் பகுதியில் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் உலவும் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.
அந்தியூரை அடுத்த அடா்ந்த வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களான கோவிலூா், எண்ணமங்கலம் பகுதிகளில் விவசாயத் தோட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில், கோவிலூா், ஆலமரத்து தோட்டத்தைச் சோ்ந்த விவசாயி சாமியப்பன் (52) என்பவரது வீட்டின் முன் கடந்த சில நாள்களுக்கு முன் கட்டப்பட்டிருந்த வளா்ப்பு நாயை சிறுத்தை தாக்கிக் கொன்றது.
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அந்தியூா் வனத் துறையினா், அங்கு படிந்திருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனா். அப்போது, அவை சிறுத்தையின் கால் தடங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதன்பேரில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் கூண்டு வைத்து வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

