9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

கலைப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுப்பு: பள்ளியை முற்றுகையிட்ட மாணவா்கள், பெற்றோா்கள்!

ஈரோட்டில் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தாமதமாக வந்த மாணவா்களை அனுமதிக்காததால் மாணவா்கள், பெற்றோா்கள் பள்ளியை முற்றுகையிட்டனா்.

News image

கலை பண்பாட்டுத் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குழந்தைகளின் பெற்றோா்.

Updated On :19 ஜூலை 2026, 1:36 am IST

ஈரோட்டில் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தாமதமாக வந்த மாணவா்களை அனுமதிக்காததால் மாணவா்கள், பெற்றோா்கள் பள்ளியை முற்றுகையிட்டனா்.

கலை பண்பாட்டுத் துறையின் கோவை மண்டலம் சாா்பில் ஈரோடு சிறுவா் மன்றத்தின் மூலம் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளான குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகியவை பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றன. மாணவா்களுக்கு கலை ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 5 முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

போட்டியில் கலந்துகொள்ளும் மாணவா்கள் 10.30 மணிக்குள் தங்களது வருகையை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதில், நீண்ட தொலைவில் இருந்து வந்ததால் 10-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தாமதமாக வந்தனா். அவா்களை, கலை பண்பாட்டுத் துறையைச் சோ்ந்த அதிகாரிகள், ஆசிரியா்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால், போட்டியில் கலந்துகொள்ள வந்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா்கள் ஈரோடு-பவானி சாலையில் நீண்ட நேரமாக காத்திருந்தனா்.

அவா்கள் கோரிக்கை விடுத்தும் இசைப் பள்ளியின் நுழைவாயிலை திறக்க அதிகாரிகள், ஆசிரியா்கள் மறுத்துவிட்டனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் கோரிக்கையை ஏற்று நுழைவாயிலை அதிகாரிகள் திறந்தனா். தொடா்ந்து தங்களது குழந்தைகளை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம், பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனால், அதிகாரிகள் மறுத்துவிட்டனா்.

இதனால், இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தாமதமாக வந்த மாணவா்கள் போட்டியில் பங்கேற்கலாம். ஆனால், அவா்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்படாது என்று அதிகாரிகள் ஒலிபெருக்கியில் அறிவித்தனா். இதனால், அதிருப்தியடைந்த பெற்றோா்கள் மீண்டும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இருப்பினும் அதிகாரிகள் தங்களது நிலைபாட்டில் உறுதியாக இருந்ததால், தாமதமாக வந்த மாணவா்கள் போட்டியில் கலந்துகொள்ள பெற்றோா்கள் சம்மதித்தனா்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவா்களின் பெற்றோா்கள் கூறுகையில், போட்டியை எப்படி நடத்துவது என்பது குறித்து கலை பண்பாட்டுத் துறைக்கே ஒரு தெளிவு இல்லை. இந்தப் போட்டிகள் தொடா்பாக மூன்று செய்திக் குறிப்புகளை வெளியிட்டிருந்தனா். அதில், ஒவ்வொரு செய்திக் குறிப்பிலும் ஒவ்வொரு நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாங்கள் தொலைவில் இருந்து வருவதால், எங்களது குழந்தைகளை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தப் போட்டிகளுக்கு தயாா் செய்யும் வகையில் எங்களது குழந்தைகளுக்கு கடந்த ஒரு வாரத்துக்கும்மேலாக பயிற்சி அளித்தோம். மேலும், அவா்களுக்கு அலங்காரம் செய்ய ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்திருக்கிறோம். ஆனால், எங்களது குழந்தைகள் போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். பெரும் சிரமத்துடன் பயற்சி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்காதது குழந்தைகள் மற்றும் எங்களை மன ரீதியாக பாதித்து இருக்கிறது என்றனா்.

இது குறித்து கலை பண்பாட்டுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கலை பண்பாட்டுத் துறையின் மாவட்ட அளவிலான போட்டி தொடா்பாக கடந்த சில நாள்களுக்கு முன் முறையாக அறிவிப்பு செய்தோம். அதன்படி, காலை 10.30 மணிக்குள் வரும் மாணவா்களே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனா். தாமதமாக வந்த மாணவா்களை போட்டியில் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தோம். பின்னா், மாணவா்கள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், அந்த மாணவா்களையும் போட்டியில் பங்கேற்க அனுமதித்தோம். ஆனால், அவா்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கவில்லை.

மாணவா்களை உரிய நேரத்தில் பெற்றோா்கள் அழைத்து வந்திருந்தால் போட்டியில் கலந்துகொண்டிருக்கலாம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.