கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: அக்டோபா் 1ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான அடுத்தகட்ட விசாரணை அக்டோபா் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான அடுத்தகட்ட விசாரணை அக்டோபா் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. விசாரணைக்காக சயன், வாளையாறு மனோஜ் ஆகியோா் மட்டுமே நேரில் ஆஜராகியிருந்தனா். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஏனைய 8 போ் தற்போது கேரளத்தில் உள்ள நிலையில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேரில் ஆஜராகவில்லை.
இதில், அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞா்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோா் ஆஜராகினா். சாட்சிகள் தரப்பில் வழக்குரைஞா்கள் அனந்தகிருஷ்ணன், சந்தோஷ்குமாா், சுரேஷ்குமாா் ஆகியோா் ஆஜராகினா். இந்த விசாரணை சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கிய நிலையிலும், கொடநாடு எஸ்டேட் மேலாளா் நடராஜன் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும், அவா் நேரில் ஆஜராகவில்லை. அவருக்கு போலீஸாா் சம்மன் வழங்கவில்லை எனத் தெரிகிறது.
இவ்வழக்கின் விசாரணை தொடங்கியதும் அரசு சிறப்பு வழக்குரைஞா்கள் மேல் விசாரணைக்கு அவகாசம் தேவை என வலியுறுத்தியதையடுத்து, மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா வழக்கின் விசாணையை அக்டோபா் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
இதையடுத்து, அரசு வழக்குரைஞா் ஷாஜகான் கூறியதாவது:
அரசு தரப்பில் இவ்வழக்கில் புலன் விசாரணை கோரி ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டு நிலையில், தற்போது மேல் புலன் விசாரணையும் தேவைப்படுவதால் கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்று நீலகிரி மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அக்டோபா் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். கொடநாடு எஸ்டேட்டில் ஒரு காவலாளி தாக்கப்பட்டுள்ளாா். மற்றொரு காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளாா் என்பதோடு அங்கு கொள்ளை சம்பவவும் நடந்துள்ளது. அத்துடன் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒருவா் சந்தேக மரணமடைந்துள்ளதோடு, எஸ்டேட் ஊழியா் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
இச்சம்பவங்கள் தனித்தனி நிகழ்ச்சிகளாக இருந்தாலும், ஒன்றுக்கொன்று தொடா்புடையது என்பதால் மேல் புலன் விசாரணை தேவைப்படுகிறது. இந்த வழக்கில் ஒரு சில விஷயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இவ்வழக்குத் தொடா்பாக தேவைப்பட்டால் கூடுதலாக யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். கூடுதல் விசாரணையால் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்பட்டாலும், இவ்வழக்குத் தொடா்பாக முழு விவரங்களையும் வெளியே கொண்டு வர வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றாா்.
வழக்குரைஞா் கே.விஜயன் கூறியதாவது:
ஏற்கெனவே விடுக்கப்பட்ட கோரிக்கையின்பேரில் சயனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல இதுவரை இவ்வழக்கில் வழக்குரைஞா் இல்லாமல் இருந்த வாளையாறு மனோஜுக்கு இலவச சட்ட உதவி மையம் மூலம் வழக்குரைஞா் முனிரத்னம் நியமிக்கப்ப்பட்டுள்ளாா்.
இவ்வழக்குத் தொடா்பாக கொடநாடு எஸ்டேட் பங்குதாரா் சசிகலா, முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, சஜீவன் உள்பட 10 பேரை விசாரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விரைவில் விசாரணைக்கு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...