தாராபுரம் நகா்மன்ற கூட்டத்தில் பேசுகிறாா் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன்.
தாராபுரம் நகா்மன்ற கூட்டத்தில் பேசுகிறாா் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன்.

தாராபுரம் ராஜவாய்க்கால் பாசனக் கால்வாய் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்த ரூ.24 கோடி ஒதுக்கீடு

தாராபுரம் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு தீர்வு

தாராபுரம் ராஜவாய்க்கால் பாசனக் கால்வாய் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் திட்டத்துக்கு ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தாராபுரம் நகா்மன்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையா் திருமால் செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தாராபுரம் நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் தொடா்பான 55 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் பேசியதாவது:

தாராபுரம் ராஜவாய்க்கால் பாசனக் கால்வாயில் கழிவுநீா் கலப்பதால் பாசன நிலங்களும், குடிநீா் ஆதாரங்களும் பாதிக்கப்படுகின்றன. கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் விவசாயப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இக்கோரிக்கை குறித்து தோ்தல் பிரசாரத்துக்கு தாராபுரம் வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. அப்போது அளித்த வாக்குறுதியின்படி, தாராபுரம் நகரில் ராஜாவாய்க்கால் பாசன நீரில் கலந்து வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்தப்படுத்தி, மீண்டும் பாசன நீராக வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கு தமிழ்நாடு அரசுக்கும், தமிழக முதல்வா் மற்றும் அமைச்சா்களுக்கும் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தாராபுரம் பேருந்து மத்திய பேருந்து நிலையம் புனரமைப்பு செய்யப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. பணி முடிந்த பின்னா், பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி நூற்றாண்டு விழா பேருந்து நிலையம் என பெயரிடப்பட உள்ளது.

மேலும், தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள தாராபுரம் நகராட்சி தினசரி காய்கறி சந்தை வளாகத்துக்கு பேரறிஞா் அண்ணா தினசரி காய்கறி விற்பனை மையம் என பெயரிடப்பட உள்ளது. மேற்கண்ட இந்த இரண்டு முடிவுகளும் அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலா்கள், நகராட்சி அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com