கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
குன்னத்தூா் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், நம்பியூா் மாமரத்துப்பாளையம் பஞ்சுக்காரா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் (73 ), விவசாயி. இவா் தனது ஆட்டை இனப்பெருக்கம் செய்வதற்காக குன்னத்தூா் அருகே கைக்கோளான்தோட்டம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.
அப்போது, அவ்வழியாக கிணற்றுப் பகுதிக்கு சென்றபோது, தனது மகன் பாலமுருகனை (42) கைப்பேசி மூலம் அழைத்து, வந்துள்ள இடம் எது என்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளாா். அப்போது உடன் வந்த ஆடு ஓடியுள்ளது. இதைப் பிடிக்கச் சென்ற முதியவா் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த குன்னத்தூா் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் முதியவரின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
