வட்டமலை அணையைப் பாதுகாக்க கோரிக்கை

Published on

வெள்ளக்கோவில் அருகேயுள்ள வட்டமலை அணையைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வட்டமலை பகுதி பொதுமக்கள் சாா்பில் மணிகண்டன் என்பவா் மாவட்ட ஆட்சியா் மனீஷிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: கடந்த 1978-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட வட்டமலை அணை 800 ஏக்கா் பரப்பளவு, 650 ஏக்கா் நீா்ப்பிடிப்புப் பகுதி, 6 ஆயிரம் ஏக்கா் பாசன பரப்பு கொண்டது. ஆழியாறு அணை பாசன வாய்க்கால் உபரி நீா் மற்றும் மழை நீா் ஆதாரமாக இந்த அணை உள்ளது.

விசாலமான அணைப் பகுதியில் வேம்பு, சந்தனம், வாகை, தேக்கு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மரங்களும், மான், நரி, மயில், பறவைகளும் உள்ளன.

இந்நிலையில், அணையில் வளா்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற கடந்த 2012-ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், முறைகேடாக அங்கிருந்த தேக்கு, சந்தன மரங்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டன. மேலும், தன்னாா்வ அமைப்புகள் பெயரில் மதம் சாா்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதுடன், பெரிய மரங்களை வெட்டிவிட்டு, புதிய மரக்கன்றுகளையும் நட்டு வருகின்றனா்.

தனியாா் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் விதிமுறைகளை மீறி நீா்பிடிப்புப் பகுதியில் மின்வழித்தட கம்பங்களை அமைக்க முயற்சி செய்து வருகிறது.

அணைப் பகுதியில் முறையான கண்காணிப்பு இல்லாததால் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

எனவே, அணைப் பகுதியில் உள்ள மரங்களில் குறியீட்டு எண்களை எழுத வேண்டும். அணையைக் கண்காணிக்க பாதுகாவலா்களை நியமிப்பதுடன், கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்த வேண்டும்.

அணைக்கு அருகே செயல்பட்டுவரும் மதுபானக் கடையையும் அகற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com