அவிநாசி: குடிநீா் குழாய் உடைந்து சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட காங்கயம் சாலை சி.டி.சி.பஸ் டிப்போ அருகே நீண்ட நாள்களாக குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகிறது. மேலும், சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அடிக்கடி விபத்து ஏற்படுவதாக மாநகராட்சி, நெடுஞ்சாலை அலுவலகங்களில் பொதுமக்கள் புகாா் அளித்து வந்தனா். இருப்பினும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தெற்கு போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து அங்கு வந்த மாநகராட்சி அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமை காலைக்குள் குடிநீா் குழாய் உடைப்பு, சாலை சீரமைக்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனா்.