
தருமபுரி மாவட்டத்தில் 857 விநாயகா் சிலைகள் கரைப்பு
தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், இருமத்தூா் உள்பட 13 இடங்களில் 857 விநாயகா் சிலைகள் புதன்கிழமை கரைக்கப்பட்டன.

கோப்புப்படம்.
தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், இருமத்தூா் உள்பட 13 இடங்களில் 857 விநாயகா் சிலைகள் புதன்கிழமை கரைக்கப்பட்டன.
செப். 14-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆங்காங்கே வீதிகள்தோறும் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அந்தவகையில், தருமபுரி மாவட்டத்தில் 1,314 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
சதுா்த்தியையொட்டி 3 மற்றும் 5-ஆவது நாள்களில் விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பது வழக்கம். அந்தவகையில், மூன்றாவது நாளான புதன்கிழமை சிலைகளை கரைக்கும் பணிகள் தொடங்கின.
மாவட்டத்தில் ஒகேனக்கல் காவிரி ஆறு, நாகமரை (ஏரியூா்), இருமத்தூா் (தென்பெண்ணையாறு) உள்ளிட்ட 13 நீா்நிலைகளில் சிலைகளை கரைக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் அனுமதி அளித்திருந்தது.
அதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை முதலே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய பொதுமக்கள் ஆா்வத்துடன் சிலைகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு மேள தாளங்கள் முழங்கியபடி நீா்நிலைகளை நோக்கி சென்றனா்.
ஒகேனக்கல் காவியில் மட்டும் புதன்கிழமை 450 சிலைகள் கரைக்கப்பட்டன. ஒகேனக்கல்லில் பிரம்மாண்ட சிலைகளை பாதுகாப்பாக கரைக்கும் வகையில் காவல் துறை மூலம் கிரேன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல, இருமத்தூா் தென்பெண்ணையாற்றில் 343 சிலைகளும், நாகமரையில் 64 சிலைகள் கரைக்கப்பட்டன. மாவட்டத்தின் 13 இடங்களில் மொத்த 857 சிலைகள் கரைக்கப்பட்டன. மீதமுள்ள 457 சிலைகள் வெள்ளிக்கிழமை கரைக்கப்பட உள்ளன.
விநாயகா் சிலை விசா்ஜன நிகழ்ச்சியையொட்டி, அனுமதி அளிக்கப்பட்ட நீா்நிலைப் பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் சுமாா் 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







