ஒசூரில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 20 வீடுகளுக்கு சீல்: வாடகை செலுத்தாததால் அதிகாரிகள் நடவடிக்கை
ஒசூரில் உள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வாடகை செலுத்தாத 20 வீடுகளை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி எழில்நகா் பகுதியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் வாடகை இருக்கும் சிலா் அரசுக்கு வாடகை செலுத்தாமல் இருந்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வாடகை செலுத்தவில்லையாம். இதையடுத்து, வியாழக்கிழமை குடியிருப்புக்குச் சென்ற அதிகாரிகள், வாடகை செலுத்தாத வீடுகளிலிருந்து பொருள்களை வெளியே எடுத்துவைத்துவிட்டு வீட்டை பூட்டி சீல் வைத்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அதிகாரிகளிடம் குடியிருப்பில் உள்ளவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து அங்குச் சென்ற பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் தலைமையிலான பாஜகவினா், அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த நிலையில், ஒசூா் மாநகர காவல் ஆய்வாளா் நாகராஜ், போலீஸாா் இருதரப்பினரிடையே பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, வாடகையில் ஒரு குறிப்பிட்ட பணத்தை உடனடியாக செலுத்திவிட்டு, மீதமுள்ள வாடகையை தவணை முறையில் செலுத்த முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து, வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.
இதுகுறித்து அரசு அலுவலா்கள் கூறியதாவது: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குடியிருப்பில் உள்ள பயனாளிகள் அரசுக்கு உரிய வாடகை செலுத்தாமல் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை நிலுவை வைத்துள்ளனா்.
இதுகுறித்து பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வாடகை செலுத்தாமல் இருந்ததால், வீடுகளை பூட்டி சீல் வைத்தோம். பிறகு தவணை முறையில் வாடகை நிலுவையை செலுத்துவதாக உறுதியளித்தனா். இதனால் வீடு மீண்டும் அவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உள் வாடகை விடப்பட்டுள்ள வீடுகள் குறித்து ஆய்வு செய்து பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
