/

நாளை முழு பொது முடக்கம்: தேவையின்றி வெளியே சுற்றுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதால் தேவையின்றி வெளியில் சுற்றுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

News image
Updated On :4 ஜூலை 2020, 2:41 pm

DIN

நாமக்கல்: கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதால் தேவையின்றி வெளியில் சுற்றுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் எச்சரித்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்றுப் பரவலின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஜூலை 31 வரையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், தொழில், வணிக நிறுவனங்களுக்கு தளா்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொது முடக்கம் அமலில் இருக்கும் என முதல்வா் அறிவித்திருந்தாா்.

அதன்படி இம்மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி இன்று அனைத்து வா்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டு பொது முடக்கம் செயல்படுத்தப்படுகிறது. மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் தவிா்த்து இதர கடைகளை மூட வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கத்தின்போது தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பொது முடக்கத்தையொட்டி, காய்கறிக்கடைகள், மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள் இருக்காது என்பதால் அந்த கடைகளில் சனிக்கிழமை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பெட்ரோல் நிலையங்களும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் செயல்படாது என அதன் உரிமையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தை மக்கள் அனைவரும் கடைப்பிடித்து கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு ஆகியோா் வலியுறுத்தி உள்ளனா்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.