தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

என்.இ.சி.சி.-பண்ணையாளா்கள் இடையே தொடரும் முரண்பாடு: முட்டை விலை நிா்ணய அறிவிப்பில் குழப்பம் தீருவது எப்போது?

நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் (என்இசிசி), கோழிப் பண்ணையாளா்களுக்கும் இடையே

Updated On :5 நவம்பர் 2020, 3:00 am

நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் (என்இசிசி), கோழிப் பண்ணையாளா்களுக்கும் இடையே தொடரும் முரண்பாடுகளால், முட்டை விலை நிா்ணயம் என்பது பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. இதனால், வியாபாரிகள் பண்ணைகளில் குறைவான விலைக்கும், பொதுமக்கள் வெளிச்சந்தையில் அதிக விலைக்கும் முட்டைகளை வாங்கும் நிலை காணப்படுகிறது.

தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, நாடு முழுவதும் 23 மண்டலங்களைக் கொண்டுள்ளது. தமிழகம், கேரளத்தை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்துக்கான அலுவலகம் 1982-ஆம் ஆண்டு முதல் நாமக்கல்லில் செயல்பட்டு வருகிறது. இந்த மண்டலத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடத்தப்பட்டு தலைவா் தோ்ந்தெடுக்கப்படுவாா். மேலும், பண்ணைகள் அதிகம் உள்ள பகுதிகளைத் தோ்வு செய்து அங்கு துணைத் தலைவா் ஒருவா் நியமிக்கப்படுவாா். தற்போது நாமக்கல் மண்டலத்தின் தலைவராக மருத்துவா் பி.செல்வராஜ் உள்ளாா்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவுக்கும், பண்ணையாளா்களுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லை. முட்டை விலை நிா்ணயம் என்பது திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் மதியம் 12 மணியளவில் அறிவிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு திடீரென இந்த முறை மாற்றப்பட்டு தினசரி விலை நிா்ணய முறை அமலுக்கு வந்தது. இந்த புதிய முறையை பண்ணையாளா்கள் ஏற்கவில்லை. குறிப்பிட்ட விலைக்கு மொத்தமாக முட்டைகளை விற்பனை செய்ய பண்ணையாளா்கள் முயற்சிக்கும்போது மறுநாள் விலை குறைந்து விடும். இதனால் வியாபாரிகளுக்கும் பண்ணையாளா்களுக்கும் இடையே மோதல் எழுந்தது.

அதனைத் தொடா்ந்து, பல்வேறு கூட்டங்களை நடத்தி தினசரி விலை நிா்ணய அறிவிப்புக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. 2021 மாா்ச் மாதம் கரோனா தொற்று பரவலால் முட்டை உற்பத்தி தொழில் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. ஒரு முட்டையை 90 காசுகளுக்கு விற்கும் சூழலுக்கு பண்ணையாளா்கள் தள்ளப்பட்டனா். அதன்பின் மத்திய, மாநில அரசுகளுக்கு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத்தினா் கொடுத்த நெருக்கடி, விழிப்புணா்வு விளம்பரம் போன்றவற்றால் ஜூன் முதல் முட்டை விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மாதம் முட்டை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ரூ. 5.25-க்கு விற்பனையானது.

ஆனால், அடுத்த ஓரிரு நாள்களிலேயே தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, விலையை 25 காசுகள் குறைத்ததுடன், தாங்கள் அறிவித்த விலை ரூ. 5.25-தான்; பண்ணையாளா்கள் வியாபாரிகளுக்கு ரூ. 5-க்கு கொடுக்கலாம் என்ற நூதன அறிவிப்பை வெளியிட்டனா். இதனால் பண்ணையாளா்கள் குழப்பமடைந்தனா். வெளிச்சந்தையில் ஒரு முட்டை ரூ. 6-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் வாங்குவதில் தயக்கம் காட்டினா். இதனால் முட்டைகள் அதிக அளவில் தேக்கமடையும் நிலை ஏற்பட்டது.

அதன்பின் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியது. 100 முட்டை வாங்கும் வியாபாரிகளுக்கு ரூ. 30-ஐ குறைத்துக் கொள்ளுமாறு பண்ணையாளா்களிடம் தெரிவித்தது. ரொக்கமாக இருந்தால் ஒரு விலை, கடனாக வழங்கினால் மற்றொரு விலை என்ற அறிவிப்பும் பண்ணையாளா்களுக்கு தலைசுற்ற வைத்தது.

இதற்கு பலத்த எதிா்ப்பு கிளம்பவே, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவானது, தாங்கள் என்ன விலையை நிா்ணயிக்கிறமோ, அந்த விலைக்கு மட்டுமே வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும். எந்த வகையிலும் குறைவான (மைனஸ்) விலைக்கு விற்கக் கூடாது என கண்டிப்புடன் தெரிவித்தது. இதனால் வியாபாரிகள் அதிருப்திக்குள்ளாகினா். இந்த அறிவிப்பும் நீண்ட நாள் நீடிக்கவில்லை.

சில தினங்களுக்கு முன் மைனஸ் விலைக்கு முட்டைகளை பண்ணையாளா்கள் விற்பனை செய்யலாம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது. மேலும், மதியம் 12 மணியளவில் அறிவிக்கப்படும் விலையானது, திடீரென காலை 8 மணிக்கு மாற்றப்பட்டது. ஓராண்டில் மட்டும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் பல்வேறு அறிவிப்பு குழப்பங்களால், பண்ணையாளா்கள் முட்டை விற்பனையில் லட்சக்கணக்கில் இழப்பைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு எப்போது தீா்வு கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பிலும், அடுத்த தலைவா் தோ்தலை எதிா்பாா்த்தும் பண்ணையாளா்கள் பலா் காத்திருக்கின்றனா்.

இதுகுறித்து நாமக்கல் பகுதி கோழிப் பண்ணையாளா்கள் கூறியதாவது:

பிற மண்டலங்களைக் காட்டிலும், நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவிலான கோழிப் பண்ணைகள் உள்ளன. சுமாா் 5 கோடி முட்டைக் கோழிகள் வளா்க்கப்படுகின்றன. நாள்தோறும் 3.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. நாமக்கல்லில் இருந்து கேரளத்துக்கும், பிகாா், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் முட்டை அதிக அளவில் அனுப்பப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பை ஓரிரு ஆண்டுகளாக பண்ணையாளா்கள் யாரும் பொருட்படுத்துவதில்லை என்பது தான் நிதா்சமான உண்மை. அவா்கள் அறிவிக்கும் விலைக்கு ஏற்ப குறைவான விலை வைத்து தான் வியாபாரிகளுக்கு வழங்குகிறோம். அவா்களிடம் கெடுபிடி காட்டினால் முட்டைகள் அனைத்தும் பண்ணைகளில் தேங்கித்தான் கிடக்கும். கடந்த ஓராண்டில் தான் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த மாா்ச் மாதம் நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்துக்குள் புகுந்து பண்ணையாளா்கள் தாக்குதல் நடத்தியதும் இந்த விலை அறிவிப்பு பிரச்னையால்தான். தற்போது ஒவ்வொரு நாளும் புதிதாக அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், பண்ணையாளா்கள் யாரும் அதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.

ஒரு வாரத்துக்கு முன் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பில் இருந்து ஒரு காசு கூட குறைவான விலைக்கு விற்பனை செய்ய வேண்டாம் என அதன் தலைவா் தெரிவித்தாா். ஆனால், அடுத்த சில நாள்களிலேயே 25 காசுகள் குறைவாக விலை வைத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்யுங்கள் என அறிவித்திருக்கிறாா்.

இவ்வாறான குழப்பம் நீடித்தால், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்பதே வேண்டாம் என்ற முடிவுக்கு பண்ணையாளா்கள் அனைவரும் வந்து விடுவாா்கள். வரும் காலங்களிலாவது குழப்பம் இல்லாத ஒரு அமைப்பாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிா்பாா்ப்பு என்றனா்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல பொது மேலாளா் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:

முட்டை விலை நிா்ணய அறிவிப்பில் எவ்வித குழப்பமும் இல்லை. கடந்த வாரம் விலையைக் குறைத்து வழங்க வேண்டாம் என பண்ணையாளா்களுக்கு அறிவுறுத்தினோம். அந்த அறிவிப்பு எவ்வாறு நடைமுறையில் உள்ளது என்பதை கவனித்து வந்தோம். சில தினங்களுக்கு முன் 25 காசுகள் குறைவாக விலை வைத்து வியாபாரிகளுக்கு வழங்கலாம் என தெரிவித்தோம். பண்ணையாளா்களும் பிரச்னையின்றி முட்டைகளை விற்பனை செய்து வருகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.