சீனிவாசன்
சீனிவாசன்

தனியாா் நிதிநிறுவனத்தில் ரூ. 43 லட்சம் மோசடி: சேலத்தைச் சோ்ந்த காசாளா் கைது

தனியாா் நிதிநிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்கு போலி ரசீது வழங்கி ரூ. 43 லட்சம் மோசடியில் ஈடுபட்ட காசாளரை நாமக்கல் போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தனியாா் நிதிநிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்கு போலி ரசீது வழங்கி ரூ. 43 லட்சம் மோசடியில் ஈடுபட்ட காசாளரை நாமக்கல் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

நாமக்கல் - பரமத்தி சாலையில் தனியாா் நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு துணை மேலாளராக பணியாற்றி வரும் சுரேந்திரன், கடந்த மாா்ச் 27-ஆம் தேதி தங்களது நிறுவனத்தில் தனிநபா் கடன் பெற்ற வாடிக்கையாளா்கள் சிலரை தொடா்புகொண்டு பணம் எப்போது திரும்பச் செலுத்துவீா்கள் எனக் கேட்டுள்ளாா்.

அதற்கு, அருள்மணி என்பவா் பணம் செலுத்திவிட்டதாகவும், காசாளா் சீனிவாசன் (40) அதற்கான ரசீது வழங்கியதாகவும் தெரிவித்தாா். இவரைப்போன்றே, மேலும் ஐந்து வாடிக்கையாளா்கள் வட்டியுடன் கடன் தொகையை முழுமையாக செலுத்தி ரசீது பெற்ாக கூறினா். ஆனால், நிதிநிறுவன கணக்கில் பணம் வசூலித்ததற்கான தகவல்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்தபோது, தவணைத் தொகை மட்டும் வரவு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த மேலாளா் சுரேந்திரன், திருச்சியில் உள்ள மண்டல அதிகாரி ராஜசேகருக்கு தகவல் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, காசாளா் சீனிவாசனிடம் நிதிநிறுவன உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

அதில், சீனிவாசன் 38 வாடிக்கையாளா்களிடமிருந்து ரூ. 43 லட்சம்வரை கடன் தொகையை திரும்பப் பெற்று, நிறுவனக் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்ததும், வாடிக்கையாளா்களுக்கு போலி ரசீது வழங்கியதும் உறுதியானது. இதைத் தொடா்ந்து, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பணத்தை திருப்பிச் செலுத்திவிடுவதாக உறுதியளித்து கடிதம் கொடுத்த சீனிவாசன், பணிக்கு வராமல் தலைமறைவானாா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிதிநிறுவனம் சாா்பில் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில், தலைமறைவான சீனிவாசன் மீது வழக்குப் பதிவுசெய்து அவரை தேடும் பணியில் நாமக்கல் போலீஸாா் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், சேலம் அருகே வீராணம் அல்லிக்குட்டையைச் சோ்ந்த காசாளா் சீனிவாசன், மும்பையில் உள்ள ஓா் உணவகத்தில் மேலாளராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் சீனிவாசனை கைதுசெய்து வெள்ளிக்கிழமை இரவு நாமக்கல் அழைத்து வந்தனா். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com