பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் இணைவதற்கு கட்டாயப்படுத்தக் கூடாது என குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வலியுறுத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மனோகரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளான லட்சுமணப்பெருமாள், வீரப்பன், பாத்திமா ராஜரத்தினம், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 30,600 விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருந்தனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக நெல், சோளம், பருத்தி உள்ளிட்ட அனைத்து வகை பயிர்களிலும் மகசூல் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், நெல் பயிருக்கு காப்பீடு செய்த 4,300 விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
பிற பயிர்களுக்கு காப்பீடு செய்த விவசாயிகள் கடந்த பல மாதங்களாக இதுகுறித்து வலியுறுத்தி வந்தபோதிலும், தற்போது வரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வில்லை. டிசம்பர் மாத இறுதிக்குள் பெற்றுக் கொடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், தற்போது வரை அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வில்லை.
இந்நிலையில், தற்போது பயிர் கடன் பெற முயற்சிக்கும் விவசாயிகளுக்கு கண்டிப்பாக காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். அதே போல், கடன் பெறாத விவசாயிகளிடமும் காப்பீட்டுத் திட்டத்தில் இணையுமாறு வற்புறுத்துகின்றனர்.
காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொடுப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க முடியாத அதிகாரிகள், காப்பீட்டுத்
திட்டத்தில் விவசாயிகளை சேர்ப்பதற்கு மட்டும் அக்கறை காட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.
இதற்கு பதில் அளித்த வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மனோகரன், 15 நாள்களுக்குள் காப்பீட்டுத் திட்டத்திற்கான இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
கூட்டத்தில், விவசாயி சுந்தர்ராஜன், ஆத்தூர் காமராஜர் அணை அருகே ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள துணை அணையினால், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குள்பட்ட ஆவாரம்பட்டி, மைலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், குடிநீர் பிரச்னையும் அதிகரித்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் அளித்த உத்தரவாதத்தின்படி, தாமரைக்குளம் கண்மாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட வில்லை. குளங்களுக்கு தண்ணீர் வழங்கும் முன்பாக, துணை அணையில் தண்ணீரை தேக்கியுள்ளனர்.
இதனால், கோட்டூர் ஆவாரம்பட்டி, காமாட்சிபுரம், பொன்னுமாந்துரை, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, அனுப்பப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 2,500 ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 17 ஊராட்சிக்குள்பட்ட 60 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என புகார் அளித்தார்.
இதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணி, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முடிந்த பின் மாவட்ட ஆட்சியருடன் பேசி உரிய தீர்வு காணப்படும் என்றார்.
ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் இல்லை
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் மற்றும் அமைச்சர் நிகழ்ச்சிகளுக்காக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் சென்று விட்டதால் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதே போல், மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலுவும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால், வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் தலைமையிலேயே காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற்றது. ஆட்சியர் முன்னிலையில் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும் என நீண்ட நேரம் காத்திருந்த விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.