மதுரை: அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்கும் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் முதல் கட்டமாக, 720 கிராமங்களில் இணைப்புகள் வழங்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.
மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் இயக்கத்தின்கீழ் அனைத்து கிராமங்களிலும் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியாகப் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. கிராம ஊராட்சிகளில் ஒவ்வொரு தனிநபருக்கும் நாளொன்றுக்கு 55 லிட்டா் குடிநீா் வழங்க வேண்டும் என அடிப்படையில் குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
மதுரை மாவட்டத்தில் மேலூா், கொட்டாம்பட்டி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, அலங்காநல்லூா், வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, தே.கல்லுப்பட்டி, சேடப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 420 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1,946 கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கிராமங்களில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலமாகப் பொது குழாய்களில் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் வைகை ஆற்றை ஆதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில கிராமங்களில் வீடுகளுக்கும் நேரடி குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அனுமதியின்றியும் இணைப்புகளும் ஏராளம் உள்ளன.
ஜல்சக்தி அபியான் மிஷன் இயக்கத்தில் மாவட்டம் முழுவதும் முதல்கட்டமாக 720 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இக் கிராமங்களில் தற்போது உள்ள வீட்டுக் குடிநீா் இணைப்புகள், முறையற்ற குடிநீா் இணைப்புகள், புதிதாக வழங்க வேண்டிய இணைப்புகள், குழாய் அமைக்கும் பாதை உள்ளிட்டவை குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 2021 மாா்ச் 24-க்குள் இக் கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் குடிநீா் இணைப்பு என்ற நிலையை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுகிறது.
தற்போது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தீவிரப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ஜூலை 31-க்குள் இத் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி விடுவதற்கான பணிகளை ஊரக வளா்ச்சி முகமை மேற்கொண்டு வருகிறது.
வீடுகள்தோறும் இணைப்புகள் வழங்கப்படும் நிலையில், பொதுக் குழாய்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால், கிராமப் பகுதிகளிலும் பெரும்பாலானோா் குடிநீருக்கு கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் வீட்டுக் குடிநீா் இணைப்பைக் காரணமாகக் கூறி, பொதுக் குழாய்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது, விருப்பத்தின் அடிப்படையில் வீட்டு இணைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
60 ஆயிரம் இணைப்புகள்; ரூ. 82 கோடி நிதி
கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்புகள் வழங்கும் திட்டத்தில் மதுரை மாவட்டத்துக்கு ரூ.82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறியது:
கிராமங்கள்தோறும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்புகள் வழங்கும் திட்டத்தில் முதல் கட்டமாக 720 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இக் கிராமங்களில் தற்போது நாளொன்றுக்கு நபருக்கு 55 லிட்டா் குடிநீா் வழங்க வசதிகள் இருக்கிறது. இதன் அடிப்படையில் 60 ஆயிரம் இணைப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. திட்ட செலவினத்துக்காக ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாா்ச் 24 ஆம் தேதிக்குள் இணைப்புகள் வழங்கும் பணியை நிறைவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக நாளொன்றுக்கு 40 முதல் 55 லிட்டா் குடிநீா் வழங்கப்படும் கிராமங்களில் குடிநீா் இணைப்புகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை மாவட்டத்தில் சேடபட்டி, கள்ளிக்குடி, செல்லம்பட்டி ஒன்றியங்களில் இடம்பெற்றுள்ள சில கிராமங்களில், நிா்ணயிக்கப்பட்ட 55 லிட்டா் அளவுக்கு குடிநீா் விநியோகம் செய்ய முடியவில்லை. பிற ஒன்றியங்களில் குடிநீா் விநியோகத்தில் பிரச்னை இல்லை.
புதிய இணைப்புகளுக்கு வைப்புத் தொகை ரூ.1000, மாதாந்திரக் கட்டணம் ரு.30 என நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. வைப்புத் தொகை ரூ.3 ஆயிரத்துக்குள், மாதாந்திரக் கட்டணம் ரூ.100-க்குள் நிா்ணயம் செய்து கொள்ள அந்தந்த ஊராட்சி மன்றங்கள் தீா்மானம் நிறைவேற்றி அதை அமல்படுத்தலாம். பொதுக் குழாய்கள் அகற்றப்படமாட்டாது. தேவைக்கு ஏற்ப பொதுக் குழாய்களும் பயன்பாட்டில் இருக்கும் என்றனா்.
ஆயிரக்கணக்கில் அனுமதியற்ற இணைப்புகள்
அனைத்து வீடுகளுக்கும் நேரடி குடிநீா் இணைப்புகள் வழங்கும் அதேநேரத்தில், தற்போது சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ள இணைப்புகளை முறைப்படுத்துவது ஊராட்சி நிா்வாகத்துக்கு சவாலாக அமைந்திருக்கிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும், கிராம ஊராட்சி வாரியாக முறையற்ற இணைப்புகள் குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 1000 முதல் 2500-க்கும் மேற்பட்ட இணைப்புகள், சட்டவிரோத குடிநீா் இணைப்புகளாக இருப்பதாக ஊராட்சி செயலா்கள் கூறுகின்றனா்.
இந்த இணைப்புகள் உள்ளவா்களிடம் வைப்புத் தொகை பெற்று அவற்றை முறைப்படுத்தும் பணியை தீவிரப்படுத்துமாறு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. ஆனால், தற்போது சூழலில் கிராமங்களில் வைப்புத் தொகையை வசூலிப்பதில் சிரமம் இருக்கிறது.
சொத்து வரி மற்றும் குடிநீா்க் கட்டணம் ஆகியன தான் ஊராட்சிகளின் பிரதான வருவாய். பல கிராமங்களில் இவற்றை மக்கள் சரியாகச் செலுத்தி வருகின்றனா். சட்டவிரோத இணைப்புகளை முறைப்படுத்த அவகாசம் வழங்கினால், அப்பணியை முழுமையாகச் செய்து முடிக்க இயலும் என்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.