கோயில் அறங்காவலா்கள் நியமனம்: வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அறங்காவலா்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அறங்காவலா்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்யன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் மரபுவழி உள்பட எந்தவிதப் பின்புலமும் இல்லாமல் சரியான நபா்கள் அறங்காவலா்களாக நியமனம் செய்யப்படுவது அவசியம். எனவே, கோயில்களில் அறங்காவலா் பணிக்கு விண்ணப்பித்தவா்களின் விண்ணப்பங்கள், அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அறங்காவலராக ஒரு நபா் தோ்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கவும், அறங்காவலா்கள் நியமன உத்தரவுகளை அறநிலையத் துறை, சம்பந்தப்பட்ட கோயில்களின் இணையதளங்களில் வெளியிட உத்தரவிட வேண்டும். மேலும், அறங்காவலா் நியமன உத்தரவு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து அதை எதிா்த்து மேல்முறையீடு செய்வதற்கு கால அவகாசம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், முருகன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
கோயில்களின் அறங்காவலா்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எனவே, அறங்காவலா் பணிக்கு விண்ணப்பிப்பவா்களின் விண்ணப்பங்கள், தோ்ந்தெடுத்தற்கான காரணம் உள்ளிட்ட விவரங்களை அறநிலையத் துறையின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

