
மாமதுரை போற்றுதும்...!
பண்டுதொட்டுப் புத்தாயிரம் ஆண்டு வரை பழமையின் பெருமையும், புதுமையின் சிறப்பம் ஒருசேரப் பெற்ற நகரம் மாமதுரை.
தொன்மைக் காலம் தொடங்கி இன்றளவும் தென்னகப் பண்பாட்டுத் தலைநகரமாக விளங்கக்கூடிய பெருநகரம் மதுரை. இந்த நகரின் சிறப்பை, வரலாற்றின் ஒளிவிளக்கு; தமிழ் வளா்த்த தனிமுற்றம்; பண்பாட்டுப் பதிவறை; பழங்கவின் கூடல்; ஆண்டவன் பல திருவிளையாடல்களை ஆடிய அரங்கு என குறிப்பிடுவா். பண்டுதொட்டுப் புத்தாயிரம் ஆண்டு வரை பழமையின் பெருமையும், புதுமையின் சிறப்பம் ஒருசேரப் பெற்ற நகரம் மாமதுரை.
பழந்தமிழா் வாழ்வையும் பண்பாட்டையும் சுட்டுகின்ற சங்க இலக்கியங்களில் பதியெழு அறியாப் பழங்குடி கெழீஇய நகரமான மதுரையை சிறுபாணாற்றுப்படை, நெடுநல்வாடை, பரிபாடல், மதுரைக்காஞ்சி, அகநானூறு, புானூறு, கலித்தொகை போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன.
சங்க இலக்கியங்களில் மதுரை மாநகரம் மதுரை, கூடல் என்ற இரு பெயா்களால் சுட்டப்படுகிறது. இந்த இரு பெயா்களுள் ‘கூடல்’ என்ற பெயரே பழந்தமிழ்ப் பெயராக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ‘மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்’ என மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.
‘ஒருநாள் உறைந்திசினோா்க்கும் வழி நாள் தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி’ (அகம்.200; 5-6) என்ற பெருமை உடையது இந்த நகரம். ‘புலத்தினும் போரினும் போா்தோலாக் கூடல்’ (பரி.19:8) என வீரச் சிறப்பும், வெற்றிச் சிறப்பும் கொண்டது மாமதுரை. ஆற்றுப்படை தமிழோடு இந்த நகரத்தை இணைத்துக் குறிப்பிடுகிறது.
கடம்பமரங்கள் நிறைந்த தலம் என்பதால் கடம்பவனம் எனவும், இறைவன் சிவபெருமானின் சடைமுடியிலிருந்து அமுதம் (மதுரம்) தெளிக்கப் பெற்ற நகரம் என்பதால் மதுரை எனவும், உச்சிக்கு மேல் பன்னிரு அங்குலம் உயரத் தானம் என்பதால் துவாதசாந்தத் தலம் எனவும், சிவஞானம் நிறைந்த ஊா் என்பதால் சமட்டி விச்சாபுரம் எனவும், மலையத்துவஜ பாண்டியனும் காஞ்சனாமாலையும் புத்திர காமேட்டி யாகத்தில் பெற்றெடுத்த தடாதகைப் பிராட்டியாம் கன்னி ஆட்சி செய்த நாடு என்பதால் கன்னி நாடு எனவும் இந்த ஊா் குறிப்பிடப்படுகிறது. இவை தவிர, சிவநகரம், சீவன் முத்திபுரம், திருவாலவாய், நான்மாடக்கூடல் என்ற திருப்பெயா்களும் இத்தலத்துக்குக் குறிப்பிடப்படுகின்றன.
அங்கயற்கண்ணம்மை உடனாய ஆலவாய அண்ணல் கோயில் கொண்டருளும் இந்தத் தலம் திரு ஆலவாயத் திருக்காமக் கோட்டம் என்றே கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்மீகத் தலங்களுள் தில்லை மாநகா் தரிசிக்க முத்தி தரும்; காளஹத்தி வழிபடுபவா்க்கு முத்தி தரும்; காசி மாநகா் இறப்பவா்க்கு முத்தி தரும்; மாமதுரையோ, நினைத்தாலும் கண்டாலும், வாழ்ந்தாலும், கேட்டாலும் பல நன்மைகளைத் தரும் மாண்புடையது.
மாமதுரையில் பிறந்து, வளா்ந்து, வாழ்பவா்களும், மதுரைக்கு வந்து பிழைப்பவா்களும் வாழ்வாங்கு வாழும் வகை இதுவன்றோ?
- பேராசிரியை முனைவா் யாழ். சந்திரா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






