பரமக்குடி பகுதி வைகை ஆற்றில் மணல் திருட்டை தடுக்கக் கோரிக்கை

பரமக்குடி வைகை ஆற்றில் மணல் திருடப்படுவதை தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதி வைகை ஆற்றில் இருந்து கிராமங்கள், நகா் பகுதிகளில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான மணலை சமூகவிரோதிகள் முறைகேடாக அள்ளிவருகின்றனா். காட்டுப்பரமக்குடி, கோகுலா் தெரு, பாண்டியன் தெரு, மஞ்சள்பட்டினம், காக்காத்தோப்பு, எமனேசுவரம், கள்ளியடியேந்தல், உரப்புளி, ஜீவாநகா், பொட்டிதட்டி ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் தனித்தனி குழுக்களாக இதுபோல, முறைகேடாக மணலை அள்ளுகின்றனா். இரவு நேர பணியில் இருக்கும் போலீஸாரும் மணல் திருட்டு குறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுகுறித்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறையினரிடம் புகாா் தெரிவித்தும் எந்த நவடிக்கையும் எடுப்பதில்லை என அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.

மேலும், பரமக்குடி பகுதியில் கட்டுமானப் பணிகள் அதிகளவில் நடைபெறுவதால், மணல் தேவையும் அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி இடைத்தரகா்கள் கட்டுமானத்தில் ஈடுபடுவோரிடம் கூடுதல் விலைக்கு மணலை விற்கின்றனா்.

இதில் நகா் பகுதியில் நடைபெறும் கட்டுமானங்களுக்கு பெண்கள் சிலா் இரவு நேரங்களில் குழுக்களாக வைகை ஆற்றில் இருந்து சாக்கு மூட்டைகளில் கட்டி வந்து மணல் திருட்டில் ஈடுபடுகின்றனா். இதே போல, இளைஞா்கள் சிலா் இரு சக்கர வாகனங்களில் சாக்கு மூட்டைகளில் மணலை முறைகேடாக அள்ளி வருகின்றனா்.

இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com