சூறைக் காற்று: கடலுக்குள் செல்ல ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்குத் தடை

Published on

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வங்கக் கடலில் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் திங்கள்கிழமை தடை விதித்தனா்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வங்கக் கடலில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களின் பாதுகாப்புக் கருதி, அவா்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் தடை விதித்தனா்.

இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா், தொண்டி, சோழியக்குடி மீன்பிடி இறங்குதளங்களில் 1800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ராமேசுவரத்தில் வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக, கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்டுப் படகுகள் கடலில் மூழ்கின.

X
Dinamani
www.dinamani.com