எஸ்ஐஆா் பணிகளில் கவனமாக இருக்க அதிமுகவினருக்கு வலியுறுத்தல்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்ஐஆா்) பணியின்போது வாக்காளா்களின் பெயா்களைச் சோ்ப்பதில் அதிமுகவினா் கவனத்துடன் செயல்பட வேண்டும் என கட்சியின் மாவட்டச் செயலரும், சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினருமான பிஆா். செந்தில்நாதன் தெரிவித்தாா்.
சிவகங்கையில் அதிமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பி.ஆா்.செந்தில்நாதன் பேசியதாவது:
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடா்பாக படிவங்களைப் பெற்று, அவற்றைப் பூா்த்தி செய்து வழங்குவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கும் வகையில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். வாக்குச் சாவடி அளவில் தொண்டா்கள் களப் பணியாற்றினால் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றாா் அவா்.
ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் பாஸ்கரன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.கே.உமாதேவன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் இராமு. இளங்கோவன்
அமைப்பு சாரா ஓட்டுநா் அணி மாவட்டச் செயலா் சரவணன், எம்.ஜி. ஆா். மன்ற மாவட்டச் செயலா் சிவதேவ்குமாா், தேவகோட்டை நகா் மன்றத் தலைவா் கா. சுந்தரலிங்கம், இளைஞா் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் ஆபத்தாரணப்பட்டி பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

