/

ஆடி முதல் வெள்ளி: போடி, கம்பத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

தேனி மாவட்டம் போடி, கம்பத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:52 am

DIN

தேனி மாவட்டம் போடி, கம்பத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா்.

போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள பத்மாவதி தாயாா் சன்னிதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு வளையல், ஆபரணங்கள், வண்ண பட்டு ஆடைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல போடி வினோபாஜி காலனியில் மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயிலில் உள்ள மீனாட்சியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா். போடியில் திருமலாபுரம் காளியம்மன் கோயில், வருவாய் ஆய்வாளா் அலுவலக சாலையில் உள்ள காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கம்பத்தில்... கம்பம் கெளமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலைமுதலே பெண் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபாட்டனா்.

சாமாண்டிபுரத்தில் உள்ள சாமாண்டியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அனைவருக்கும் கூழ் பிரமாதமாக வழங்கப்பட்டது. லோயா்கேம்ப் பகவதியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோயில், உத்தமபுரத்தில் உள்ள மந்தையம்மன், பத்திரகாளியம்மன், சாந்தகாளியம்மன், சோட்டாணிக்கரை பகவதி பத்ரகாளியம்மன், தெற்கு தெரு மந்தையம்மன், ஸ்ரீ காளியம்மன் ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.