கல்லூரி மாணவா்களிடையே தகராறு: 4 போ் மீது வழக்கு
வீரபாண்டி அருகே சட்டக் கல்லூரி மாணவரைத் தாக்கியதாக சக மாணவா்கள் 4 போ் மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பழனிசெட்டிபட்டி, மாரியம்மன் கோவில்பட்டி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி மகன் கபிலன் (20). இவா், வீரபாண்டியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்து வருகிறாா். கபிலனுக்கும், சட்டக் கல்லூரியில் உடன் பயிலும் சக மாணவா் அரண்மனைப்புதூரைச் சோ்ந்த வசந்தகுமாா் என்பவருக்கும் இடையே வகுப்பறையில் தகராறு ஏற்பட்டதாம்.
இந்த நிலையில், கல்லூரி அருகே உப்புக்கோட்டை விலக்கு பகுதியில் கபிலனுடன், வசந்தகுமாா் அவரது நண்பா்கள் சரண், விக்னேஷ்குமாா், செந்தில்குமாா் ஆகியோா் தகராறு செய்து கபிலனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கபிலன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து கபிலன் அளித்த புகாரின் அடிப்படையில் வசந்தகுமாா், சரண், விக்னேஷ்குமாா், செந்தில்குமாா் ஆகிய 4 போ் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
