கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.3.95 லட்சம் மதிப்பில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்

News image
Updated On :7 டிசம்பர் 2012, 1:00 pm

கோ.ஜெயக்குமார்

கொடிநாளையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் 55 பேருக்கு ரூ.3,95,750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் வழங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர், பென்னிங்டன் நூலக கலையரங்கில் ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் தலைமையில் விழா நடைபெற்றது.

உதவி இயக்குநர் (பொறுப்பு) சிவதாணுபிள்ளை வரவேற்றார். நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் பேசுகையில் கூறியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் கொடிநாள் விழா சிறப்பாக கொண்டாடவும், அனைத்து பள்ளிகளிலும் கொடிநாள் குறித்து தெரிவிக்கவும், இக்கொடிநாள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொடிநாள் நிதி வசூல் மூலம் வசூல் செய்யப்படும் தொகை போரில் இறந்த படைவீரர் விதவையர், போரில் ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள், அவர் தம் குடும்பத்தினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் 9760 முன்னாள் படைவீரர்களுக்கும், 3650 விதவைகளுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து மாதந்திர நிதியுதவி, திருமண நிதியுதவி, கல்வி நிதியுதவி, இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்த முன்னாள் படைவீரர் அவர்தம் விதவையர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால நிதியுதவிகள் போன்ற பல்வேறு நிதியுதவிகள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாண்டில் சுமார் 465 முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கு ரூ.47,33,451 வரையிலான நலத்திட்ட உதவி வழங்கப்படுள்ளது. இந்த அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் முன்னாள் படைவீரர்களுக்கு மத்திய, மாநில அரசுப் பணிகள் மற்றும் அரசு சார்ந்த தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித் தொகையும் இத்துறை மூலம் வழங்கப்படுகிறது.

முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் படைவீரர் சுய தொழில் தொடங்கிட மத்திய மாநில அரசு ஆதரவுடனும், கதர் கிராமத் தொழில், செம்பெக்ஸ், பல்வேறு சுய வேலைவாய்ப்பு பயிற்சிகளும், வங்கிக் கடன் உதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் போரில் ஊனமுற்றோர் 20 நபர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி வழங்கி வருகிறது.

ஒரே மகனை ராணுவத்திற்கு அனுப்பிய பெற்றோருக்கும், ராணுவத்திற்கு இரு அல்லது அதற்கு மேற்பட்ட மகன்களை அனுப்பிய பெற்றோருக்கும், போர்ப்பணி ஊக்க மானிய தொகையாக ஆண்டிற்கு ரூ.750 மற்றும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

போரின் போது இறந்த படைவீரர்களின் மனைவியர், பெற்றோர் மற்றும் போரில் ஊனமுற்ற படைவீரர்களுக்கு ஆண்டு பராமரிப்பு மானியமாக தலா ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

வங்கிக் கடன் வட்டி மானியத் திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்யும் முன்னாள் படைவீரர்கள் பெற்ற கடனில் ரூ.5 லட்சத்திற்கு 75 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

நம் தாய்நாட்டை காக்க போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்கள், போரில் ஊனமுற்றோவர்கள் உள்ளிட்டோரின் சேவையை போற்றும் வகைகியில் ஊனமுற்ற வீரர்கள், விதவைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் வறுமையில் இருந்து மீளவும், வாழ்வில் முன்னேறவும் அனைவரும் தாரளமாக தங்களால் இயன்ற பொருளுதவியை வழங்க வேண்டும் என ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.சக்திவேல், வட்டாட்சியர் ஐ.திரௌபதி, மேஜர் குமரேசன், லெப்ட்டினன்ட் கர்னல் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.