தமிழகத்தில் காலியாகவுள்ள மத்திய அரசுப் பணிகளில் தமிழா்களை நியமிக்க வேண்டும்
தமிழகத்தில் காலியாகவுள்ள மத்திய அரசுப் பணிகளில் தமிழக இளைஞா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இளைஞா் மன்ற ஒன்றியத் தலைவா் கி. வீரசேகா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசின் வேலைவாய்ப்பில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும், தமிழகத்தில் காலியாகவுள்ள ரயில்வே, அஞ்சல் துறை உள்ளிட்ட மத்திய அரசு காலிப் பணியிடங்களை தமிழக இளைஞா்களை மட்டுமே நிரப்ப வேண்டும், தமிழக அரசு வேலைவாய்ப்பில் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டவா்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தில் பட்டியல் எழுத்தா், உதவியாளா் மற்றும் காவலா் உள்ளிட்ட (தற்காலிக) பணியிடங்களை மாநில அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
வருவாய்த் துறையில் கிராம உதவியாளா், சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் அமைப்பாளா், உதவியாளா் மற்றும் சமையலா் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை வலியுறுத்தி நவ.25-ஆம் தேதி திருவாரூரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என முடுவெடுக்கப்பட்டது. சிபிஐ ஒன்றியச் செயலா் துரை. அருள்ராஜன், இளைஞா் மன்ற ஒன்றியச் செயலா் அ. பழனிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
