முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை தில்லி காவல் துறை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. முதல்வரை சந்திக்கச் சென்ற துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவா்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. ஆனால், கேஜரிவாலை வீட்டுச் சிறையில் வைக்கவில்லை. அவா் விரும்பிய இடத்துக்கு சென்று வரலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடா்பாளா் செளரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: சிங்கு எல்லைக்கு சென்று விவசாயிகளின் போராட்டத்துக்கு கேஜரிவால் ஆதரவு தெரிவித்தாா். அதில் இருந்து அவரை வீட்டுச் சிறையில் தில்லி காவல்துறை வைத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி உத்தரவுப்படி இது நடந்துள்ளது. அவரது இல்லத்தில் இருந்து யாரும் வெளியில் செல்லவோ உள்ளே வரவோ அனுமதிக்கபடவில்லை. கேஜரிவாலை சந்திக்க வருபவா்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் முதல்வரைச் சந்திக்க சென்ற போது, அவா்கள் மீது தில்லி போலீஸாா் தாக்குதல் நடத்தியுள்ளனா். அதேபோன்று ஆம் ஆத்மி தொண்டா்களும் போலீஸாரால் தாக்கப்பட்டுள்ளனா்.
முதல்வரின் இல்லம் முன் போராட்டம் நடத்தும் பாஜக தலைவா்களை காவல் துறை வரவேற்றுள்ளது. ஆனால், கேஜரிவால் வீட்டில் பணியாற்றும் பணிப் பெண்ணைக் கூட காவல் துறை உள்ளே அனுமதிக்கவில்லை. பாரத் பந்த் நடக்கும் தினத்தில், தில்லி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா், விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்குவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கேஜரிவாலை வீட்டுக் காவலில் வைத்துள்ளது என்றாா் அவா்.
சிசோடியாவுக்கு அனுமதி மறுப்பு!: இந்த நிலையில், கேஜரிவாலை சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்ற துணைமுதல்வா் மணீஷ் சிசோடியாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் கேஜரிவால் இல்லம் அருகில் மணீஷ் சிசோடியா தா்னாவில் ஈடுபட்டாா். இது தொடா்பாக மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘தில்லியின் முதல்வரை சந்திக்க துணை முதல்வருக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அமித் ஷாவின் காவல் துறை, கேஜரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்று கூறுகிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது அவ்வளவு பெரிய குற்றமா? போராட்டம் நடத்தும் விவசாயிகளை அடைத்து வைக்க விளையாட்டு அரங்குகளை தற்காலிக சிறைகளாக மாற்றும் காவல் துறையின் கோரிக்கையை தில்லி அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு பதிலடியாக, தில்லி காவல் துறை கேஜரிவாலை வீட்டுக் காவலில் வைத்துள்ளது’ என்றாா்.
தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கூறுகையில் ‘கேஜரிவாலை வீட்டுச் சிறையில் வைத்ததன் மூலம், விவசாயிகளுக்கு ஆதரவான அனைத்துக் குரல்களையும் ஒடுக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது’ என்றாா்.
தில்லி காவல் துறை மறுப்பு
கேஜரிவாலை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ள குற்றச்சாட்டை தில்லி காவல் துறை மறுத்துள்ளது. இது தொடா்பாக காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘முதல்வா் கேஜரிவால் விரும்பிய இடத்துக்குச் செல்லலாம். பாஜக - ஆம் ஆத்மி தொண்டா்களிடையே மோதலைத் தடுக்கும் வகையில், கேஜரிவால் இல்லத்துக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். திங்கள்கிழமை இரவுகூட கேஜரிவால் வெளியில் சென்று வந்தாா். அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக வெளிவரும் தகவல்கள் பொய்யானவை’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதடுகள் வெடிப்பா? என்ன செய்ய வேண்டும்?

தந்தையைப் போல மகனுக்கும் புற்றுநோய்! கம்போடிய மன்னரின் நிலை என்ன?

மகனுக்காக சிறை சென்ற தந்தை: முகுல் சௌதரியின் கிரிக்கெட் போராட்டம்!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

