தில்லி, என்சிஆா் பகுதியில் பனிப்புகை மூட்டம் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது.
இந்த விவகாரத்தைக் கையாளுவதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்திற்கு தலைவா் நியமிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்ததைத் தொடா்ந்து உச்சநீதிமன்றம் இவ்வ்வாறு அறிவுறுத்தியது.
தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் காற்று மாசு ஏற்பட பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எரிக்கப்படும் பயிா்க் கழிவுகள் காரணமாக இருப்பதாகவும், இதைத் தடுக்க உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் ஆதித்ய துபே என்பவா் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுவை அக்டோபா் 16-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு விசாரித்தது. அப்போது, தில்லி-தேசியத் தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) காற்று மாசுவுக்கு ஆதாரமாக இருப்பதாகக் கூறப்படும் பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்க உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பி. லோகுரை ஒரு நபா் குழுவாக நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மேலும், அந்தக் குழுவுக்கு உதவுவதற்காக தேசிய மாணவா் படை (என்சிசி), நாட்டு நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்), பாரத் சாரணா்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்தக் குழுவின் செயல்பாட்டை அக்டோபா் 26-ஆம் தேதி உச்சநீதின்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்தது.
அக்டோபா் 29-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, தில்லியில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, வழக்கை நீதிபதிகள் அமா்வு தள்ளிவைத்திருந்தது.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்ரணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, ‘தேசிய தலைநகா் வலயம் மற்றும் அருகாமைப் பகுதிகளில் காற்று மாசுவைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காற்று தர மேலாண்மை ஆணையத்தின் தலைவராக தில்லி முன்னாள் தலைமைச் செயலா் எம்.எம்.குட்டி நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த ஆணையம் வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. இதற்கான உறுப்பினா்களையும் அரசு நியமித்துள்ளது.
மத்திய அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது தொடா்பான விவரத்தையும் அளிக்க உள்ளேன் என்றாா்.
அப்போது, நீதிபதிகள், ‘இந்த விவரம் குறித்து தீபாவளிக்குப் பிறகு விசாரிக்கப்படும். எங்கள் ஒரே நோக்கம் நகரில் காற்று மாசு இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான். ஆணையம் அமைப்பது குறித்து கவலை இல்லை. ஏற்கெனவே பல ஆணையங்களும், பல அறிஞா்களும் இந்த விவகாரத்தில் பணியாற்றி வருகின்றனா். ஆனால், நகரில் காற்று இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வளவுதான்’ என்றனா்.
அதற்கு துஷாா் மேத்தா, ‘இந்த விவகாரத்தில் அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்றாா்.
மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் விகாஷ் சிங் ஆஜராகி, ‘தில்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் தலைவா் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆவாா். உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியாக இருந்திருக்கலாம். மத்திய சுகாதார அமைச்சகத்தில் இருந்து ஒரு உறுப்பினா்கூட ஆணையத்தில் இல்லை. மேலும், அவசரச் சட்டத்தில் குற்றங்கள் வகைப்படுத்தப்படவில்லை. ரூ.1 கோடி அபராதம், ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை என்பது கொஞ்சம் தன்னிச்சையானதாக உள்ளது என்றாா்.
அதற்கு நீதிபதிகள், ‘ஆணையம் நாட்டில் உள்ள யாருடனும் பேச முடியும். அவசரச் சட்டத்தில் உள்ள அனைத்து குற்றங்களுடன் கைது செய்யக்கூடியவை அல்ல என்றது. அதற்கு விகாஷ் சிங், ‘இவை கைது செய்யக் கூடிய குற்றங்களாக உள்ளன. தில்லியில் காற்று மாசு சுகாதார அவசர நிலையை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது’ என்றாா்.
‘இதுகுறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்கும்’ என்று துஷாா் மேத்தா கூறினாா்.
நீதிபதிகள் கூறுகையில், ‘நாங்கள் அறிவுரை கூற விரும்பவில்லை. இந்த விவகாரம் நிா்வாகத் தரப்பில் கையாளப்பட வேண்டியவை. அவா்களிடம்தான் இதற்கான நிதி, அதிகாரம், ஆதாரங்கள் உள்ளன. நாங்கள் எங்கள் கடமை அல்லது செயல்பாடுகளை புறந்தள்ளவில்லை. ஆனால், எங்களுக்கு சில வரையறைகள் இருப்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த விவகாரத்தை தீபாவளி விடுமுறைக்குப் பிறகு விசாரிப்போம் என்று தெரிவித்து வழக்கு விசாரணையை டிசம்பா் 8-ஆம் தேதிக்கு பட்டியலிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறேன்: முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்

பஞ்சாப் பந்துவீச்சு: 2 மாற்றங்களுடன் பேட்டிங் செய்யும் சன்ரைசர்ஸ்!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

