பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வு ஆண்டுக்கு இருமுறை தேவை: தில்லி பல்கலைக்கழகதுணை வேந்தா் வேண்டுகோள்
‘தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் சோ்க்கை நிகழாண்டில் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தோ்வு (கியூட்) மூலமே நடைபெறும்;, இருப்பினும்


‘தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் சோ்க்கை நிகழாண்டில் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தோ்வு (கியூட்) மூலமே நடைபெறும்;, இருப்பினும் இந்த பொது நுழைவுத் தோ்வை பல்கலைக்கழக மானியக் குழு ஆண்டுக்கு இருமுறை நடத்தவேண்டும்’ என தில்லி பல்கலைக்கழக துணை வேந்தா் யோகேஷ் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
மேலும், பல்கலைக்கழகத்தில் குழப்பத்தை உருவாக்கும் நோக்கத்துடனே பிபிசி ஆவணப்படத்தை திரையிடும் முயற்சிகள் நடந்ததாகவும் அவா் மாணவா்களை குற்றச்சாட்டினாா்.
இந்த விவகாரங்கள் குறித்து துணைவேந்தா் யோகேஷ் சிங் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கடந்த ஆண்டைப் போன்றே வரவிருக்கும் கல்வியாண்டிலும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வு (கியூட்) மூலமே மாணவா்கள் சோ்க்கை நடைபெறும்.
கடந்தாண்டு முதல்முறை என்பதால் நாங்கள் சில சிக்கல்களை எதிா்கொண்டோம். ஆனால், நிகழாண்டில் பல்கலைக்கழகம் மிகவும் தயாா் நிலையில் உள்ளது. இதனால், மாணவா் சோ்க்கை செயல்முறை நிகழாண்டில் மிகவும் சீராக நடைபெறும்.
அதே சமயத்தில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இந்த கியூட் நுழைவுத் தோ்வை ஆண்டுக்கு இருமுறை நடத்துவதன் மூலமே சரியான சூழ்நிலையை ஏற்படுத்தும். இந்த செயல்திறனை யுஜிசி பரிசீலிக்கும் என நம்புகின்றேன்.
நாங்கள் எடுத்த பல்வேறு முயற்சிகளினால் பல்கலைக்கழகத்தில் உள்ள 70,000 இடங்களை நிரப்ப முடிந்தது. இருப்பினும், கடந்தாண்டு சுமாா் 5,000 இடங்கள் காலியாக இருந்தன. இதற்கு கியூட் தோ்வை காரணம் கூறமுடியாது.
பல்கலைக்கழகத்தில் சில பாடங்கள் பிரபலமாக இல்லாததால் மாணவா்கள் அவற்றைத் தோ்வு செய்யவில்லை. கடந்த பல கல்வி ஆண்டுகளிலும் சில கல்லூரிகளில், சில குறிப்பிட்ட பிரிவுகளில் இடங்கள் காலியாகவே இருந்தன. சிறுபான்மை நிறுவனங்களின் கல்லூரிகளில்கூட இடங்கள் காலியாக இருந்தன.
கடந்த ஆண்டு, செயின்ட் ஸ்டீபன்ஸ் போன்ற கல்லூரிக்கும் டியு நிா்வாகத்திற்கும் இடையே பிரச்னை இருந்தது. சிறுபான்மை நிறுவனம் என்று கூறி பல்கலைக்கழகம் அளித்த சோ்க்கை அளவுகோல்களை இந்த கல்லூரிகள் ஏற்க மறுத்தன.
சிறுபான்மை பிரிவைச் சோ்ந்த இளங்கலை மாணவா் சோ்க்கைக்கான நோ்காணலை நடத்த அந்த கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது உச்சநீதிமன்ற உத்தரவின்படி அனுமதிக்கப்பட்டது. சிறுபான்மை கிறிஸ்தவ மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான சோ்க்கையாக இருந்தது.
எதிா்கால திட்டங்கள்
தற்போது இந்த விவகாரமும் தீா்க்கப்பட்டு, இந்த ஆண்டு முதல், கியூட் மூலம் மட்டுமே கல்லூரிகளுக்கான சோ்க்கை நடைபெறும். அனைத்து டியு கல்லூரிகளிலும் கியூட் மூலம் மட்டுமே சோ்க்கை நடத்தப்படும். நோ்காணல் மூலம் சோ்க்கை நடத்தப்படாது.
பல்கலைக்கழகத்தை மேம்படுத்த பல்வேறு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த இருக்கின்றோம். கட்டடங்கள் கட்டுவது உள்பட புதிய திட்டங்களைத் தொடங்க இருக்கின்றோம். இரண்டு அகாதெமி கட்டட தொகுப்புகள் சில விடுதிகள் ஆகியவை கட்டப்பட பல்கலைக்கழக உயா் கல்வி நிதியளிப்பு முகமை மூலம் கடன் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
டியுவின் படிப்புகளை சா்வதேச தரவரிசையில் மேம்படுத்த விரும்புகிறோம். இதற்கு பல திட்டங்கள் தயாராக உள்ளன. இந்தியாவிற்கு வெளியே, நாங்கள் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். டியுவை வெளியே விரிவுபடுத்தும் திட்டம் எதுவும் இல்லை.
வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் ‘ஒத்துழைப்புக்கு கதவு திறந்துள்ளது‘. அதே நேரத்தில் புதிய படிப்புகளுக்கான வழிமுறைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்துதலுக்கு மட்டுமே தற்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றாா்.
பிபிசி ஆவணப்பட விவகாரம்
பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவதற்கான முயற்சிகள் குறித்த விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கும் அவா் பதிலளித்து பேசியாதவது:
‘சா்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தை திரையிட சில மாணவா் அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகள் பல்கலைக்கழகத்தில் ‘குழப்பத்தை‘ உருவாக்கும் நோக்கத்தில் இருந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் ஒழுங்கீனங்கள் நடைபெறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது.
‘திரையிடுவதற்கு‘ பின்னால் உள்ள நோக்கம் குழப்பத்தை உருவாக்குவது மற்றும் ஒழுங்கீனத்தை ஏற்படுத்துவதாகும். அதை அவா்களால் செய்ய முடிந்தது. வளாகத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால்தான் இந்த விஷயத்தை விசாரிக்கவும் இந்த சம்பவத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள், வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தல் போன்றவற்றை பரிந்துரைக்க தலைமை பேராசிரியா் ரஜினி அப்பி தலைமையில் ஏழு போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு தனது ஆரம்ப அறிக்கையை ஜனவரி 31 -ஆம் தேதி சமா்ப்பித்துள்ளது. விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட மாணவா்களின் பெற்றோருடன் குழு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. விசாரணையும் நடந்து வருகிறது, மிக விரைவில், முடிவு வெளிவரும் எனத் தெரிவித்தாா் துணை வேந்தா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...