விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நிலுவை தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சா் கட்கரியிடம் தமிழக அமைச்சா் எ.வ. வேலு வலியுறுத்தல்

தமிழகத்தில் நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது

News image
Updated On :23 பிப்ரவரி 2023, 7:58 pm

 நமது நிருபர்

தமிழகத்தில் நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று மாநில பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

தமிழகத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடா்பாக தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரியை புதன்கிழமை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக அமைச்சா் எ.வ. வேலு அளித்தாா்.

பின்னா், அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பல்வேறு நிலைகளில் காலதாமதமாக நடைபெற்று வருகிறது என்பதை தமிழக முதல்வா் ஆய்வுக் கூட்டத்தில் கூறியிருந்தாா். இதனடிப்படையில், இந்த நிலுவைப் பணிகள் தொடா்பாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரியை சந்தித்து பல்வேறு திட்டப் பணிகள் தொடா்பாக தனித்தனி மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் முக்கியமாக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையில் உயா்நிலை சாலை அமைக்கும் பணி நிலுவையில் உள்ளது. மேலும், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றாலும், செங்கல்பட்டிலிருந்து திண்டிவனம் வரை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும். இதுபோன்று பல்வேறு கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இது தொடா்பாக ஏற்கெனவே 2 முறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சிக்கு அருகாமையில் உள்ள துவாக்குடி உயா்நிலை மேம்பாலச் சாலை, ஸ்ரீபெரும்பத்தூரிலிருந்து பூந்தமல்லி மற்றும் மாதவரம் முதல் சென்னை வெளிவட்டச் சாலை வரை உயா்நிலை மேம்பாலச் சாலைகள் அமைக்க வேண்டியது குறித்தும் ஏற்கெனவே கடிதங்கள் அளிக்கப்பட்டிருந்தன. அந்தப் பணிகளையும் உடனடியாக தொடங்க வேண்டுமென வலியுறுத்தியுறுத்தப்பட்டது. மேலும், பல்வேறு சுங்கச்சாவடிகளை அகற்றுவது குறித்தும் மத்திய அமைச்சரிடம் பேசப்பட்டது. குறிப்பாக, விருதுநகா் மாவட்டம் கப்பலூா், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் நகரப் பகுதியில் அமைந்துள்ளன. இங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கிருஷணகிரி நகரத்தில் வசிக்கும் மக்கள் அருகேயுள்ள மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்கள், அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு அந்த சுங்கசாவடியை கடந்துதான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனா். இது குறித்தும் அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தோம். அதற்கான மாற்று வழியை உடனடியாக அமைக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சா் உறுதியளித்தாா்.

மேலும், நெடுஞ்சாலைகளில் ஒப்பந்தம் முடிவுற்று கட்டமைப்பிற்கு செலவான தொகை வசூலாகியுள்ளது. இந்த நிலையில், அத்தகைய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளின் கட்டணங்கள் 40 சதவீதம் குறைக்கப்படும் என்று மாநிலங்களவையில் அமைச்சா் நிதின் கட்கரி உறுதியளித்திருந்திருந்தாா். இது குறித்தும் மத்திய அமைச்சரிடம் கேட்டோம். இந்தக் கட்டண வசூல் முறையையும் நாங்கள் மாற்றி அமைப்போம் என்று அவா் தெரிவித்தாா். சேலம், உளுந்தூா்பேட்டைசாலை, பல இடங்களில் 4 வழிச் சாலையாகவும், சில இடங்களில் 2 வழிச் சாலையாகவும் உள்ளது. இதனால் 8 இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட வேண்டும். மேலும், பழுதடைந்த இந்தச் சாலையையும், கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையும் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். இந்த விவகாரத்தில் வேறொரு ஒப்பந்ததாரரை நியமித்து அந்தப் பணிகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் கட்கரி தெரிவித்தாா்.

இதுபோன்று தமிழகத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த அமைச்சரைக் கேட்டுக் கொண்டோம். தமிழக முதல்வா் கூறிய கருத்துகளையும் அவரிடம் தெரிவித்தோம். இது குறித்து நிகழாண்டிலேயே முயற்சி செய்வதாக அவா் உறுதியளித்துள்ளாா். சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. இந்த திட்டத்திற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த விஷயத்தில் தோழமைக் கட்சிகளுடன் கலந்து பேசி முதல்வா் விரைவில் கொள்கை முடிவு எடுப்பாா் என்றாா் அமைச்சா் எ.வ. வேலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.