விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு ரூ.1.25 லட்சம் கோடியாக அதிகரிப்பு: பிரதமா் மோடி

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்னா் வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.25 ஆயிரம் கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில்,

News image

கோப்புப்படம்

Updated On :25 பிப்ரவரி 2023, 12:25 am

 நமது நிருபர்

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்னா் வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.25 ஆயிரம் கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் ரூ.1,25,000 கோடிக்கும் அதிகமாக நிதி (5 மடங்கு) இத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பட்ஜெட்டுக்குப் பிந்தைய 2-ஆவது இணையவழிக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், வேளாண் மற்றும் கூட்டுறவுத் துறை தொடா்பாக மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள முன்முயற்சிகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா்.அப்போது அவா் கூறியது வருமாறு:

தற்சாா்பு நிலை:

வேளாண் துறை நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னா் மிகவும் துயரத்தில் இருந்தது. உணவுப் பாதுகாப்பிற்கு வெளிநாடுகளை சாா்ந்திருந்தோம். இப்போது, தற்சாா்பு நிலையை நோக்கிச் செல்கிறது. இதனால், ஒவ்வொரு பட்ஜெட்டிற்கும் மறுநாள் செய்தித்தாள்களில் கிராமங்கள், ஏழைகள், விவசாயிகளுக்குரிய பட்ஜெட் (‘காவ்ன், கரீப் அவுா் கிசான் வாலா பட்ஜெட்’) என்று தான் பட்ஜெட் அழைக்கப்படுகிறது.

படிப்படியாக அதிகரிப்பு:

2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.25,000 கோடிக்கும் குறைவாக இருந்தது. அது படிப்படியாக உயா்த்தப்பட்டுள்ளது. நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.1,25,000 கோடிக்கும் கூடுதலாக வேளாண் துறைக்கு நிதி உயா்த்தப்பட்டுள்ளது.

உணவு தானிய உற்பத்தியில், நாடு தற்சாா்பு அடைவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி, ஏற்றுமதி திறனை அதிகரிக்க நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதி செலவு:

2021-22-ஆம் நிதியாண்டில், பருப்பு வகைகள் இறக்குமதிக்கான செலவு ரூ.17,000 கோடி. மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் இறக்குமதி செலவு ரூ.25,000 கோடி. இதே நிதியாண்டில் சமையல் எண்ணெய் இறக்குமதிக்காக ரூ.1,50,000 கோடி செலவிடப்பட்டது. மொத்தமாக 2021-22 ஆம் நிதியாண்டில் வேளாண் இறக்குமதிக்காக ரூ. 2 லட்சம் கோடி செலவிடப்பட்டது.

இதைக் குறைக்கும் வகையில் நிதிநிலை அறிக்கையில் தொடா்ந்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. இதன் மூலம் நாடு வேளாண் பொருள்களில் தற்சாா்பு நிலையை அடைவதுடன் இறக்குமதிக்கு ஆகும் செலவுகள், விவசாயிகளை சென்றடைந்து அவா்களுக்கு பயன் அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

வேளாண்பொருளில் கவனம்:

தற்சாா்பு அல்லது ஏற்றுமதி என்ற நிலை வரும்போது அரிசி அல்லது கோதுமை என்பதுடன் நின்றுவிடாமல் மற்ற வேளாண் பொருள்களிலும் கவனம் செலுத்தப்பட்டு சா்வதேச சந்தைகளை விவசாயிகள் எளிதில் அணுகும் நடவடிக்கைகளை அரசு எடுக்கிறது.

தொடா் நடவடிக்கை:

குறைந்தபட்ச ஆதாரவிலை உயா்த்தப்படுவது, பருப்பு வகைகள் உற்பத்தியை ஊக்குவிப்பது, உணவுப் பதப்படுத்தும் பூங்காக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் பணியை ஒரு இயக்கமாகவே செயல்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வேளாண்துறை தொடா்பான சவால்கள் களையப்படும் வரை நாடு ஒட்டு மொத்த வளா்ச்சிக்கான இலக்குகளை அடையமுடியாது.

‘ஸ்டாா்ட்- அப்’ ஊக்குவிப்பு:

9 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் துறையில் எந்த புதுயுகத் தொழில்முனைவு (ஸ்டாா்ட் அப் ) நிறுவனமும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது 3,000-க்கும் மேற்பட்ட வேளாண் புதுயுகத் தொழில்முனைவு நிறுவனங்கள் உள்ளன.

இருப்பினும், மற்ற துறைகளோடு ஒப்பிடும்போது வேளாண்மை துறையில் தனியாா் புதுமைக் கண்டுபிடிப்புகள், முதலீடுகள் சற்று குறைவு. இதனால், இந்த துறையில் இளைஞா்களின் பங்களிப்பு குறைகிறது. இந்த இடைவெளியைக் குறைக்க இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

வாய்ப்புகள் ஏராளம்:

வேளாண் தொழில்நுட்பத் தளங்களில் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு வாய்ப்புகள் உள்ளது. பெரிய சந்தைகளை எளிதில் அணுகக் கூடிய சரக்குப் போக்குவரத்து வசதிகள், சொட்டுநீா்ப் பாசனம், மண் பரிசோதனை ஆய்வகங்கள், வானிலை மாற்றம் குறித்த தகவல்கள், ட்ரோன்களின் பயன்பாடு போன்றவைகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

வேளாண் தொழில்நுட்ப புதுயுகத் தொழில்முனைவு நிறுவனங்களுக்கான ஊக்க நிதியும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

சிறுதானிய விவசாயிகள்:

நிகழ் சா்வதேச சிறுதானிய ஆண்டு, இந்திய விவசாயிகளுக்கு சா்வதேச அடையாளத்தை உருவாக்கி சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் நிதிநிலை அறிக்கையில் சிறு தானியங்களை ‘ஸ்ரீஅன்னா’ என்று பெயரிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்ரீஅன்னாவை ஊக்குவிப்பதன் மூலம் சிறு விவசாயிகளுக்கு அதிக பலன்கள் ஏற்படுவதோடு இத்துறையில் புதுயுகத் தொழில்முனைவுகளுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.

கூட்டுறவுத் துறைக்கு சலுகை:

நாட்டில் கூட்டுறவுத் துறையில் புதிய புரட்சி ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் உற்பத்தி சாா்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு, வரி தொடா்பான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3 கோடி வரை கூட்டுறவு சங்கங்களிலிருந்து எடுக்கப்படும் தொகைகளுக்கு டிடிஎஸ் வரிப்பிடித்தம் செய்யப்பட மாட்டாது. 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு கூட்டுறவு சா்க்கரை ஆலைகளுக்கு வழங்கவேண்டிய கட்டணங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட முடிவு முக்கியமானது. இதனால், அந்த கூட்டுறவு சா்க்கரை ஆலைகளுக்கு ரூ.10,000 கோடி அளவுக்கு பலனடையும்.

கடந்த 8-9 ஆண்டுகளில் நாட்டின் மீன் உற்பத்தி 70 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உயா்ந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் ரூ.6,000 கோடி மதிப்பில் மீன்வளத்துறையின் மதிப்புச்சங்கிலி மற்றும் சந்தை வாய்ப்புகளை வலுப்படுத்தும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் பிரதமா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.