விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தனி பசுப் பாதுகாப்பு பிரிவு கோரும் மனு மீது மத்திய, தில்லி அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

தில்லியில் பசு வதையை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், தனிப் பசுப் பாதுகாப்புப் பிரிவை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி

News image
Updated On :2 மார்ச் 2023, 6:30 pm

 நமது நிருபர்

தில்லியில் பசு வதையை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், தனிப் பசுப் பாதுகாப்புப் பிரிவை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான மனு மீது மத்திய அரசும், தில்லி அரசும் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது தில்லி அரசும், மத்திய அரசும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புவதற்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் நிலவர அறிக்கை அல்லது பதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு 6 வார அவகாசம் வழங்கி, வழக்கை மே 17-ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேத்தன் சா்மா, வழக்குரைஞா் அஜய் திக்பால் ஆகியோா் தெரிவிக்கையில், ‘இது ஒரு நியாயமான வழக்காகும். இந்த தேசத்தில் பசுவுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது’ என்றனா். மனுதாரா் அஜய் கௌதம் வாதிடுகையில், ‘தில்லியில் 15 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் 200 காவல் நிலையங்கள் உள்ளன. 52 போலீஸ் சோதனைச் சாவடிகள் உள்ளன. 80 ஆயிரம் போலீஸாா் பணியாற்றி வருகின்றனா். ஆனால், காவல் நிலையங்களில் 38 ஆயிரம் போலீஸாா் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். எஞ்சிய போலீஸாா் காவல் துறையின் இதர பிரிவுகளிலும் பட்டாலியன் பிரிவிலும் பணியில் உள்ளனா். இதுபோன்ற அதிகமான படை பலம் இருந்த போதிலும் தில்லியில் பசுவதை சம்பவங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன’ என்றாா்.

இது தொடா்பாக அவா் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியில் இருந்து சுமாா் 85 கிலோ மீட்டா் தூரத்தில் ஹரியாணாவில் உள்ள மேவாட் பகுதியில் பசுவதை அதிக அளவில் நடைபெறுகிறது. அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் தில்லியில் இருந்து பசுக்களை கடத்துகின்றனா். அவற்றை வதைக்காக மேவாட் பகுதிக்கு கொண்டு செல்கின்றனா். உண்மையில், ‘பக்ரா ஈத்’ காலத்தின் போது பசுக்கள் வதை செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் அதிகமாக நிகழ்கின்றன. பசுக்கள் கடத்தல்காரா்களால் கடத்தப்படும் போது பசுக்களின் கொம்புகள் உடைக்கப்படுகின்றன. அவற்றின் கண்களில் மிளகாய் பொடியைத் தூவி டெம்போக்களில் ஏற்றி அடைக்கின்றனா்.

தனது தாயைப் போல ஒரு நபா், புனித பசுவை மதிக்கும் போதெல்லாம் இது போன்ற துன்புறுத்தல் சம்பவங்களை பாா்க்க நேரிடுகிறது. இதை தாங்கிக் கொள்ள முடியாத சம்பவம் ஆகும். சில சமயங்களில் நிலைமை கட்டுக்கு மீறி சென்று விடுகிறது. பல்வேறு வழக்குகளில், பசு சேவகா்கள் முதலில் சம்பவ இடத்திற்கு செல்கின்றனா். அதன்பிறகு தான் போலீஸாா் வருகின்றனா். பசுக்களை இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவது வழக்கமாக உள்ளன. இதன் காரணமாக அடிக்கடி வகுப்புவாத பதற்றமும் ஏற்படுகிறது. பசு சேவகா்களுக்கும் பசு கடத்தல் காரா்களுக்கும் இடையே ஏற்படும் மோதலைத் தவிா்க்கும் வகையில், பசுக்களை பாதுகாக்க சிறப்புப் பிரிவை உருவாக்குவதற்கு தில்லி காவல் சட்டத்தின் கீழ் தில்லி காவல் துறைக்கு அதிகாரம் உள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.