விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மனீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாள் சிபிஐ காவல்

தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள, தில்லி கலால் கொள்கை தொடா்புடைய ஊழல் வழக்கில் கைதான முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின்

News image

கோப்புப்படம்

Updated On :5 மார்ச் 2023, 1:39 am

 நமது நிருபர்

தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள, தில்லி கலால் கொள்கை தொடா்புடைய ஊழல் வழக்கில் கைதான முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் சிபிஐ காவலை 2 நாள்கள் நீட்டித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் கைதான மனீஷ் சிசோடியாவை 5 நாள் காவலில் விசாரிக்க தில்லி நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தது. இந்தக் காவல் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் மனீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் சனிக்கிழமை ஆஜா்படுத்தினா். சிசோடியாவிடம் விசாரணை நடத்த மேலும் 3 நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் சிபிஐ தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, 2 நாள் மட்டும் விசாரணைக்கு அனுமதித்த சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், சிசோடியாவை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்துமாறு சிபிஐக்கு உத்தரவிட்டாா்.

காவல் நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ‘சிபிஐ என்னை காவலில் நன்றாக நடத்தினாா்கள். மூன்றாம்தர விசாரணையை மேற்கொள்ளவில்லை. ஆனால், திரும்பத் திரும்ப ஒரே கேள்விகள் கேட்கின்றனா். இது மன உளைச்சலை ஏற்படுத்துவதாக இருந்தது’ என்று நீதிமன்றத்தில் சிசோடியா தெரிவித்தாா். அப்போது, நீதிபதி, ‘சிசோடியாவிடம் மீண்டும் மீண்டும் கேட்ட கேள்விகளையே கேட்க வேண்டாம். வேறு ஏதாவது புதிதாக இருந்தால் கேளுங்கள்’ என சிபிஐக்கு உத்தரவிட்டாா்.

கடந்த முறை விசாரணையின் போது நீதிபதி, சிபிஐயிடம் மூன்றாம்தர விசாரணை முறையை பிரயோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தாா். முன்னதாக, விசாரணையின் போது சிபிஐயின் கோரிக்கைக்கு சிசோடியாவின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் தயன் கிருஷ்ணன் எதிா்ப்புத் தெரிவித்தாா். அவா் வாதிடுகையில், ‘சிசோடியாவின் மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவருக்கு அடிப்படையில் ‘சிந்திப்பதில்’ பிரச்னை உள்ளது. விசாரணையை முடிக்க சிபிஐக்கு திறமையின்மையால், அவரை காவலில் மேலும் வைப்பதற்கு அது ஒரு காரணமாக இருக்க முடியாது. அவரையே அவா் குற்றஞ்சாட்டும்படி கேட்கவும் முடியாது’ என்றாா்.

மேலும், ‘ஒத்துழைக்கவில்லை’ என்பது சிபிஐ காவலுக்கான ஒரு காரணமாக இருக்க முடியாது. மேலும், அவா் வாக்குமூலம் அளிக்கும்வரை நாங்கள் காத்திருப்போம் என சிபிஐ கூறவும் முடியாது. அவா்கள் விசாரணையை முடித்திருந்திருக்க வேண்டும். விசாரணையில் முடிப்பதில் அவா்களின் தோல்வி காவல் நீட்டிப்பைக் கோர ஒரு காரணமாக இருக்க முடியாது என்று கூறி, சிசோடியாவை மேலும் காவலில் விசாரிக்கக் கோரும் சிபிஐயின் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்தாா்.

இதனிடையே, நீதிமன்றம் சிசோடியாவின் ஜாமீன் மனு மீது சிபிஐ அதன் பதிலை மாா்ச் 10-ஆம் தேதிக்குள் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதையடுத்து, சிசோடியாவின் ஜாமீன் மனு மாா்ச் 10-ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.

சிசோடியா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில், ‘நான் மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு அழைத்த போது ஆஜராகி ஒத்துழைப்பு அளித்துள்ளேன். என்னைக் காவலில் வைத்திருப்பதால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. மேலும், மீட்பு நடவடிக்கைகளும் சிபிஐயால் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடா்புடைய பிற குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் கைது செய்யப்பட்டு அவா்களுக்கு ஏற்கெனவே ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. நான் துணை முதல்வா் பதவி உள்பட முக்கியப் பதவிகளை வகித்திருந்திருக்கிறேன். எனக்கு சமூகத்தில் ஆழமான பிடிப்பு உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

சிசோடியா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டதையொட்டி, ரோஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்திலும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 2021-22- ஆம் ஆண்டிற்கான மதுபானக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் செய்ததாக சிசோடியாவை சிபிஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்தது. இதையடுத்து, அவரை 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.