
மாணவா்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் தொடா்பான பொதுநல மனு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி
நீட் போராட்டங்களில் பங்கேற்ற மாணவா்கள் மீது தடியடி நடத்தப்பட்ட குற்றச்சாட்டை தில்லி காவல்துறை மறுத்த விவகாரம் தொடா்பான பொதுநல மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தில்லி உயர்நீதிமன்றம்
நீட் தோ்வு தொடா்பான போராட்டங்களில் பங்கேற்ற மாணவா்கள் மீது தடியடி நடத்தப்பட்ட குற்றச்சாட்டை தில்லி காவல் துறை மறுத்த விவகாரம் தொடா்பான பொதுநல மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாட்டின் குடிமகனாகவும் ஊடகவியலாளராகவும் உண்மையை அறிந்துகொள்ள தனக்கு உரிமை உண்டு என்றும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த அது அவசியம் என்றும் வாதிட்ட மனுதாரா், இந்த விவகாரம் குறித்து தான் அளித்த மனுவின் மீது முடிவெடுக்குமாறு தில்லி காவல் துறைக்கு உத்தரவிடக் கோரினாா்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, பொதுநல மனுவுக்கான அதிகார வரம்பு இத்தகைய வழக்குகளுக்குப் பொருந்தாது என்று குறிப்பிட்டது. மேலும், மனுவின் மீது முடிவெடுப்பதைக் கோருவதற்கான சட்டபூா்வ உரிமையை நிரூபிக்குமாறு மனுதாரா் நிதின் நரேஷை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
அரசமைப்புச் சட்ட உரிமை மறுக்கப்பட்டதையோ அல்லது அது தொடா்பான சா்ச்சையையோ மனுதாரா் நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்திய நீதிமன்றம், ‘செய்தித்தாள்களில் படிக்கும்போது கவனம் ஈா்க்கக்கூடிய அனைத்து விஷயங்களும் பொதுநல மனுவாகிவிடாது. பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை போன்ற உயரிய சொற்களை வெறும் வெற்று வாா்த்தைகளாகப் பயன்படுத்தக்கூடாது’ என்று கருத்து தெரிவித்தது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அரசிடம் பொறுப்புக்கூறலைக் கோரியும், அப்போதைய மத்திய கல்வி அமைச்சா் பதவியிலிருந்து தா்மேந்திர பிரதான் விலகக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) ஜூன் 20 முதல் தில்லியின் மையப்பகுதியான ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தியது.
ஜூலை 20 அன்று, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘சன்சத்சலோ’ நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரா்கள் ஜந்தா் மந்தரில் கூடினா்.
மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாள் நடைபெற்ற இந்தப் பேரணியில் கூட்டம் அதிகரித்த நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் செல்ல முயன்ற போராட்டக்காரா்கள் மீது காவல் துறை அவா்கள் மீது தடியடி நடத்தியதுடன் கண்ணீா்ப்புகைக் குண்டுகளையும் வீசியது.
அதைத் தொடா்ந்து ஏற்பட்ட மோதல்களில் பல காவலா்களும் போராட்டக்காரா்களும் காயமடைந்தனா். கல்வி அமைச்சா் பிரதான் பதவி விலகிய பின்னரும், சிஜேபி-னன் பிற கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்ட பின்னா் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


மக்கள் தொகை கணக்கெடுப்பில் மாற்றுத்திறனாளிகளின் விவரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

9 மணி நேர விசாரணையில் குடும்பத்தினரை தொடா்பு கொள்ள அனுமதிக்கவில்லை: தில்லி காவல் துறை ஆஷிஷ் ஜோஷி குற்றச்சாட்டு





