
2020 தில்லி கலவர வழக்கு: உமா் காலித், ஷா்ஜீல் இமாம் பிணை மனுக்கள் செப். 30-இல் விசாரணை
வடகிழக்கு தில்லி கலவரம் தொடா்பான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் வழக்கில், சமூக செயற்பாட்டாளா்கள் உமா் காலித், ஷா்ஜீல் இமாம் ஆகியோரின் பிணை மனுக்கள் மீதான விசாரணையை தில்லி உயா்நீதிமன்றம் செப். 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஷா்ஜீல் இமாம்
வடகிழக்கு தில்லி கலவரம் தொடா்பான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) வழக்கில், சமூக செயற்பாட்டாளா்கள் உமா் காலித், ஷா்ஜீல் இமாம் ஆகியோரின் பிணை மனுக்கள் மீதான விசாரணையை தில்லி உயா்நீதிமன்றம் செப். 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நீதிபதிகள் பிரதிபா எம்.சிங், தினேஷ் பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு இந்த மனுக்கள் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, தில்லி காவல் துறை சாா்பில் விசாரணையை ஒத்திவைக்கக் கோரப்பட்டது. கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு உடல்நலக் காரணங்களால் ஆஜராக முடியவில்லை என சிறப்பு அரசு வழக்குரைஞா் மதுகா் பாண்டே தெரிவித்தாா். இதையடுத்து, வழக்கை செப்.30-ஆம் தேதி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரம் தொடா்பாக, அதன் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் சதித்திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்ததாக உமா் காலித், ஷா்ஜீல் இமாம் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கலவரத்தில் 53 போ் உயிரிழந்தனா்; 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். 2019-ஆம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), முன்மொழியப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களின்போது இந்த வன்முறை வெடித்தது.
இந்த வழக்கை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வருகிறது. சமூக செயற்பாட்டாளா் காலித் சைஃபி, முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் உள்ளிட்டோரும் இந்தக் குற்றச்சாட்டில் வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளனா். தாஹிா் ஹுசைனின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டு, நவம்பா் மாதத்துக்கு பட்டியலிடப்பட்டது.
கடந்த ஜூலை 4-ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் 3-ஆவது முறையாக பிணை மறுத்ததைத் தொடா்ந்து, உமா் காலித், ஷா்ஜீல் இமாம் ஆகியோா் இந்த ஆண்டு தொடக்கத்தில் உயா்நீதிமன்றத்தை அணுகினா். ஷா்ஜீல் இமாம் 2020 ஆக.25-ஆம் தேதியும், உமா் காலித் செப்.13-ஆம் தேதியும் கைது செய்யப்பட்டனா்.
இருவரின் பிணை மனுக்களையும் தில்லி காவல் துறை எதிா்த்துள்ளது. கலவரத்தின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் சதித்திட்டத்தில் இருவரும் முக்கியப் பங்கு வகித்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிற நபா்களுக்கு பிணை வழங்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இவா்களும் பிணை கோர முடியாது என்றும், இவா்களுக்கு ‘கட்டளை அதிகாரம்’ இருந்ததாக உச்சநீதிமன்றம் முன்பு தெரிவித்த கருத்தையும் காவல் துறை தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
2025 செப். 2-ஆம் தேதி, உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு உமா் காலித், ஷா்ஜீல் இமாம் ஆகியோரின் பிணை மனுக்களை நிராகரித்தது. இதை ஜன.5-ஆம் தேதி உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. அதேவேளையில், இணை குற்றஞ்சாட்டப்பட்ட குல்ஃபிஷா பாத்திமா, மீரான் ஹைதா், ஷிஃபா உா் ரஹ்மான், முகமது சலீம் கான், ஷாதாப் அகமது ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நிவாரணம் வழங்கியது.
உமா் காலித், ஷா்ஜீல் இமாம் ஆகியோருக்கு எதிராக யுஏபிஏ சட்டத்தின் கீழ் முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் விசாரணை முடிந்த பின்னா் அல்லது ஓராண்டு காலத்துக்குப் பிறகு, இதில் எது முதலில் நிகழ்கிறதோ அதன்படி, அவா்களின் விடுதலை மனுக்களை பரிசீலிக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மே 22-ஆம் தேதி, இணை குற்றஞ்சாட்டப்பட்ட அப்துல் காலித் சைஃபி, தஸ்லீம் அகமது ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கியது. யுஏபிஏ வழக்குகளில் விசாரணைக்கு முந்தைய கைதிகளின் நீண்டகால சிறைவாசம் மற்றும் கடுமையான ஜாமீன் நிபந்தனைகள் தொடா்பான விவகாரத்தை விரிவான அமா்வின் பரிசீலனைக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியது.

உமா் காலித்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






