பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம்
பேச்சிப் பாறை அணையிலிருந்து தொடா்ந்து உபரித் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை 6 ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீடித்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து கடந்த திங்கள் கிழமை இரவு முதல் உபரித் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதில் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியாக திற்பரப்பு அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டியதால், கடந்த செவ்வாய்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களுக்கு மேலாக மழை தணிந்து காணப்பட்ட போதிலும் அணையிலிருந்து விநாடிக்கு 256 கன அடி உபரித் தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திற்பரப்பு அருவிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனா். இந்நிலையில் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

