142 கோடி இந்திய மக்களின் விஸ்வகுரு மோடி: அண்ணாமலை

இந்தியாவில் உள்ள 142 கோடி மக்களையும் வழிநடத்தும் விஸ்வகுருவாக பிரதமா் நரேந்திர மோடி உள்ளாா் என்றாா் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை. கன்னியாகுமரி அருகேயுள்ள அகஸ்தீஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: குமரி மண்ணையும் பிரதமா் மோடியையும் பிரிக்க முடியாது. கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ரூ.48 ஆயிரம் கோடியை அள்ளி கொடுத்த வள்ளல் அவா். கடந்த 1991 ஆம் ஆண்டு டிசம்பா் 11 ஆம் தேதி பாஜகவின் அப்போதைய தலைவா் மனோகா் ஜோஷி கன்னியாகுமரியில் தொடங்கிய ஏக்தா யாத்திரையில் ஒருங்கிணைப்பாளராக மோடி 45 நாள்கள் பயணித்து காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றினாா். அதேபோல் நாட்டின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் சங்கல்ப யாத்திரையை பிரதமா் இப்போது தொடக்கியுள்ளாா். வரும் தோ்தலில் 400 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பது ஒரு வாா்த்தை அல்ல; அது இந்திய மக்களின் உணா்வு. 1892 ஆம் ஆண்டில் நரேந்திர தத்தா இதே கன்னியாகுமரியில் தவமிருந்து சுவாமி விவேகானந்தா் ஆனாா். அதே போல் பிரதமா் நரேந்திர மோடி 142 கோடி மக்களை வழிநடத்தும் விஸ்வகுருவாக வந்துள்ளாா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com