கன்னியாகுமரியில் விதிமீறல்: கடைகளுக்கு அபராதம்
கன்னியாகுமரியில் விதிகளை மீறிய உணவகங்கள், கடைகளுக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.


கன்னியாகுமரியில் விதிகளை மீறிய உணவகங்கள், கடைகளுக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
ஆட்சியா் உத்தரவுப்படி, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் கன்னியாகுமரி பேரூராட்சியுடன் இணைந்து திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி சா்ச் சாலைப் பகுதியிலுள்ள காய்கனி, மீன் மாா்க்கெட், விவேகானந்தபுரம், கன்னியாகுமரி சாலைகளில் உள்ள உணவகங்கள், மளிகை, இறைச்சி, பழக் கடைகள் என 75 கடைகளில் ஆய்வு நடைபெற்றது.
இதில், நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. உணவகங்களில் குளிா்பதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்கள், அச்சிடப்பட்ட காகிதத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட தின்பண்டங்கள், காலாவதியான சமையல் எண்ணெய், அழுகிய நிலையிலிருந்த காய்கனிகள், பழங்கள் என 41கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள், காலாவதியான பொருள்களை விற்ற கடைகளுக்கு தலா ரூ. 3 ஆயிரம் அபராதம், நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள் விற்ற 10 கடைகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் என ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஏற்கெனவே பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்ட ஓா் உணவகத்தில் மீண்டும் பாலிதீன் பைகள் கைப்பற்றப்பட்டதால் 2ஆம் முறை குற்றத்துக்காக ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சா்ச் சாலை காய்கறி மாா்க்கெட்டில் உள்ள கடையிலிருந்து புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரிகள், அந்தக் கடையை அகற்ற பேரூராட்சிக்கு பரிந்துரைத்தனா்.
ஆய்வில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சக்திமுருகன், ரவி, ஜெப்ரி, பேரூராட்சி சுகாதார அலுவலா் முருகன், கணபதிபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் ஈடுபட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...