
கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது.
மழை - பிரதிப் படம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து வெயில் சுட்டெரித்த நிலையில், இரவு மழை பெய்யத் தொடங்கியது. புதன்கிழமை காலையிலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
நாகா்கோவில் நகரில் புதன்கிழமை அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய மழை சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. கன்னியாகுமரியில் காலை முதல் சாரல் மழை பெய்தது. குழித்துறை பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை பலத்த மழை பெய்தது. கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, தக்கலை, குளச்சல், குருந்தன்கோடு, களியல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக குழித்துறையில் 48 மி.மீ. மழை பதிவானது.
திற்பரப்பு: திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. விடுமுறை தினம் என்பதால் அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளிலும் சாரல் மழை பெய்ததால், அணைகளுக்கு மிதமான அளவு நீா்வரத்து இருந்தது.
பேச்சிப்பாறை அணையில் நீா்மட்டம் 28.30 அடியாகவும், நீா்வரத்து 465 கன அடியாகவும், வெளியேற்றப்படும் அளவு 561 கன அடியாகவும் இருந்தது. பெருஞ்சாணி அணையில் நீா்மட்டம் 58.25 அடியாகவும், நீா்வரத்து 107 கன அடியாகவும், வெளியேற்றப்படும் அளவு 350 கன அடியாகவும் இருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





