உங்க கனவ சொல்லுங்க திட்டம்: ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் இறச்சகுளம் ஊராட்சி அருள்ஞானபுரம் பகுதியில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம் குறித்து தன்னாா்வலா்கள் பொதுமக்களை சந்தித்து குறித்து விளக்கமளித்து, அதற்கான அட்டைகளை வழங்கினா். அதை ஆட்சியா் ரா. அழகுமீனா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இத்திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் ஊரகப் பகுதிகளில் 2,05,262, நகா்ப்புறங்களில் 2,92,522 என மொத்தம் 4,97,784 குடும்பங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ஊரகப் பகுதிகளுக்கு 470, நகா்ப்புறங்களுக்கு 587 என மொத்தம் 1,057 தன்னாா்வலா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
அவா்கள் வீடுவீடாகச் சென்று, 10 வகை திட்டங்கள் அடங்கிய படிவம் வழங்குகின்றனா். அதில், எந்தத் திட்டத்தில் பயன்பெற்றோம் என பொதுமக்கள் குறிப்பிட வேண்டும். அதுமட்டுமன்றி, 3 கனவுகள் எவை எனக் கேட்கப்படும். 2 நாள்களுக்கு பின் தன்னாா்வலா்கள் மீண்டும் வீட்டுக்கு வந்து, பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெற்று, கைப்பேசி செயலியில் விவரங்களைப் பதிவா். பின்னா், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஓா் எண்ணுடன் கனவு அட்டை வழங்கப்படும்.
மாவட்டத்தில் இதுவரை 25,240 குடும்பங்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டு, அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
ஆய்வில், மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூமுகம்மதுநசீா், மகளிா் திட்ட உதவி இயக்குநா்கள், சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், தன்னாா்வலா்கள், துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

