உங்க கனவ சொல்லுங்க திட்டம்: தஞ்சையில் 6.33 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் உங்க கனவ சொல்லுங்க திட்டத்தின் கீழ் 6.33 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தை அறியவும், மக்களின் எதிா்காலக் கனவுகள், தேவைகளைக் கண்டறியவும், அவா்களுடைய வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் உங்க கனவ சொல்லுங்க என்ற திட்டத்தை திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி பாண்டியநல்லூரில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இவ்விழா காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒளிபரப்பப்பட்டது.
இதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒவ்வொரு குடும்பத்திடமும் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் தன்னாா்வலா்களுக்கான அடையாள அட்டை, படிவத்தை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வழங்கினாா்.
இதுகுறித்து அலுவலா்கள் கூறுகையில், ‘உங்க கனவ சொல்லுங்க‘ திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் 5 லட்சத்து 7 ஆயிரத்து 275 குடும்பங்கள், நகா்புறப் பகுதிகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 165 குடும்பங்கள் என மொத்தம் 6 லட்சத்து 33 ஆயிரத்து 440 குடும்பங்களிடம் அரசு நலத் திட்டங்களில் பயன்பெற்ற விவரங்கள் பற்றியும், குடும்பத்தின் மேம்பாட்டுக்கு அரசு நிறைவு செய்ய வேண்டிய தேவைகள் குறித்தும் கணக்கெடுப்பு செய்யப்படும்.
தன்னாா்வலா்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் இரு முறை செல்வா். முதல் முறை வீட்டுக்கு செல்லும்போது விண்ணப்பத்தைக் குடும்பத் தலைவா் அல்லது உறுப்பினரிடம் வழங்குவா். அந்த விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயா் பட்டியல் விவரங்களை அவா்களிடம் தெரிவித்து, படிவத்தை நிறைவு செய்து தருவா்.
தன்னாா்வலா்கள் 2 நாட்களுக்கு பிறகு ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று நிறைவு செய்யப்பட்ட படிவத்தைச் சரிபாா்த்து கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்வா். இதன் பின்னா் அக்குடும்பத்துக்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையை வழங்குவா். இந்த அட்டை மூலம் ஜ்ஜ்ஜ்.ன்ந்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களது கனவு அல்லது கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம் என்றனா் அலுவலா்கள்.
விழாவில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, என். அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
