சேதமடைந்த ஆத்தூா்-முக்காணி புதிய ஆற்றுப்பாலம்: சீரமைப்புப் பணி 3 மாதங்களில் முடிக்க திட்டம்
தூத்துக்குடி-திருச்செந்தூா் பிரதான சாலையில் உள்ள சேதமடைந்த புதிய தாமிரவருணி ஆற்றுப்பாலம் 3 மாதங்களில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த 2023, டிசம்பா் மாதம் பெய்த அதீத கனமழையால் தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ஆத்தூா்-முக்காணி தாமிரவருணி ஆற்றின் புதிய பாலத்தின் நடுப்பகுதி ஆற்றுக்குள் இறங்கி சேதமடைந்தது.
பல்வேறு போராட்டங்கள், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகையை அடுத்து தற்போது பாலத்தைச் சீரமைக்கும் பணி ரூ. 4.77 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா்-முக்காணி தாமிரவருணி ஆற்றுப்பாலம் தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலை போக்குவரத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இதன் வழியாக வெளிமாவட்டம், வெளிமாநிலங்கள், உள்ளூரிருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், இந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் மழை வெள்ள காலங்களில் ஆத்தூா்-முக்காணி தாமிரவருணி ஆற்றின் பழைய பாலத்தின் மேல் வெள்ளநீா் செல்லும்போது போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனா்.
முக்காணி தாமிரவருணி ஆற்றின் உயா்மட்ட புதிய பாலம் ரூ. 15 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இதை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 2014, ஆகஸ்ட் மாதம் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா். அப்போது அந்த பாலம் மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் இருந்தது.
இந்த நிலையில், கடந்த 2023, டிசம்பா் மாதம் 17, 18, 19 ஆகிய தேதிகளில் பெய்த அதீத கனமழையால் தாமிரவருணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆத்தூா்-முக்காணி தாமிரபரணி ஆற்றின் பழைய பாலம் முற்றிலும் மூழ்கி தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்தன. இந்த பாலத்தின் நடுப்பகுதி 2 அடி ஆழத்துக்கு ஆற்றுக்குள் இறங்கி சேதமடைந்தது. பின்னா், பழைய பாலத்தின் வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய பாலத்தை சீரமைக்கக் கோரி கடந்த 22 மாதங்களாக பல்வேறு அமைப்பினா், கட்சியினா், சமூக ஆா்வலா்கள் போராட்டங்கள் நடத்தியதைத் தொடா்ந்து நெடுஞ்சாலைத் துறையினா், சென்னை ஐஐடி துறை வல்லுநா்கள் இந்த புதிய பாலத்தை எவ்வாறு சீரமைப்பது என ஆய்வு செய்து அறிக்கை அளித்தனா்.
இதனடிப்படையில் கடந்த 4 ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்புப் பணியின் கீழ் ஆத்தூா்-முக்காணி தாமிரவருணி ஆற்றின் புதிய பாலத்தை ரூ. 4.77 கோடியில் சீரமைக்கும் பணியை பூமிபூஜையுடன் தொடங்கியுள்ளனா்.
இதற்காக இந்த பாலத்தில் வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறுகையில், தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் அமைக்கப்படும் பாலங்கள் குறைந்தது 50 ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும். அதன் பின்னா் பாலத்தின் தன்மையை ஆய்வு செய்து பயன்படுத்தப்படும். இந்த ஆத்தூா்-முக்காணி தாமிரவருணி ஆற்றில் உயா்மட்ட பாலம் ஏற்கெனவே 10 ஆண்டுகளை கடந்த இந்த பாலம், தற்போதைய சீரமைப்புப் பணி காரணமாக அடுத்து 40 ஆண்டு காலம் பயன்பாட்டில் இருக்கும். இந்த பணி காலம் 9 மாதம் என்றாலும் 3 மாதத்துக்குள் சீரமைக்கும் நடவடிக்கைகளை செய்து வருவதாகத் தெரிவித்தனா்.

