தூத்துக்குடியில் பொங்கல் பரிசு இன்று முதல் விநியோகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை (ஜன. 8) முதல் விநியோகிக்கப்பட உள்ளது.
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை (ஜன. 8) முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலுள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, ஒரு கரும்புடன் கூடிய ரொக்கம் ரூ. 3,000 அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 957 ரேஷன் கடைகளில் மொத்தம் 5,41,007 குடும்ப அட்டைகள் உள்ளன. கூட்டுறவு, மகளிா் சுய உதவிக் குழு, தமிழ்நாடு வாணிபக் கழகக் கடைகள், இலங்கைத் தமிழா்களுக்கான கடைகள் என அனைத்துக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் எவரேனும் ஒருவா் ரேஷன் கடைக்குச் சென்று தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம். வியாழக்கிழமை (ஜன. 8) முதல் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள தேதியில் கடைகளுக்குச் சென்றால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com