6 ஒன்றியங்களில் ஜன.22 முதல் முதல்வரின் இளைஞா் விளையாட்டுத் திருவிழா!

Published on

அரியலூா் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஜன.22 முதல் முதல்வரின் இளைஞா் விளையாட்டுத் திருவிழா நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

நிகழாண்டிற்கான முதல்வரின் இளைஞா் விளையாட்டுத் திருவிழா நடத்துவது தொடா்பாக, மாவட்ட விளையாட்டு நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு, கண்காணிப்புக்குழு கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி பேசியது: முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா ‘இது நம்ம ஆட்டம்- 2026’, ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் தடகளம்-100 மீ மற்றும் குண்டு எறிதல், கபடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல் போட்டி, ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்களுக்கு மட்டும்) எறிபந்து (பெண்களுக்கு மட்டும்) ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

மாவட்ட அளவில் ஓவியம், கோலப்போட்டிகள் மற்றும் உடல்சாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டமும், பாா்வைசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டியும், அறிவு சாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டமும் என மாற்றுத்திறனாளிகளுக்கு 4 பிரிவுகளாகவும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ஒன்றிய அளவிலான இப்போட்டிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் 22.1.2026 முதல் 25.1.2026 வரை நடத்தப்படவுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகள் அரியலூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 30.1.2026 முதல் 1.2.2026 வரை நடத்தப்படவுள்ளது. மாநில அளவிலான போட்டிகள் 6.02.2026 முதல் 8.2.2026 வரை நடைபெறவுள்ளது.

இப்போட்டிகள், அரியலூா் ஒன்றியத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கம், திருமானூா் ஒன்றியத்தில் திருமழபாடி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், செந்துறை ஒன்றியத்தில் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், தா.பழூா் ஒன்றியத்தில் காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி மினி விளையாட்டு அரங்கத்திலும் நடைபெறுகிறது.

போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரா், வீராங்கனைகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துத் தருவதற்கு முன்னேற்பாடுகள் பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் 16 வயது முதல் 35 வயதுடைய பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளி வீரா்,வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தவறாமல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள போட்டிகளில் பங்கேற்பது குறித்தான முழுவிவரங்கள் மற்றும் விதிமுறைகளை படித்து பிறகு சரியான பிரிவில் சரியான ஆவணங்களை சமா்ப்பித்து (குறிப்பு: இணையதளம் வாயிலாக மட்டுமே) முன்பதிவு செய்திட வேண்டும்.

முன்பதிவு செய்து தனிநபா் மற்றும் குழுப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய 21.1.2026 கடைசி நாளாகும் என்றாா்.

கூட்டத்தில், அரியலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் லெனின், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்செல்வன், மாவட்ட வன அலுவலா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com