/

கரூரில் கோயில் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகளுக்கு சீல்

கரூரில் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் வைக்கப்பட்டிருந்த 5 கடைகளுக்கு புதன்கிழமை காலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்

News image
Updated On :9 அக்டோபர் 2024, 6:42 pm

Din

கரூரில் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் வைக்கப்பட்டிருந்த 5 கடைகளுக்கு புதன்கிழமை காலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். மேலும் அதிகாரிகளை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 123 ஏக்கா் நிலத்தை தனியாா் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோயில் நிலத்தை மீட்கும் வகையில் திருத்தொண்டா்சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத்தொடா்ந்தாா். இதையடுத்து கோயில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூா் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை முழுமையாக செயல்படுத்தாத மாவட்ட நிா்வாகத்திற்கும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து மாவட்ட நிா்வாகம் மற்றும் திருப்பூா் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் கோயில் நிலத்தில் இருந்த கடைகளுக்கு சீல் வைக்க முயன்றபோது பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து ஒரு கடைக்கு மட்டும் சீல் வைத்துவிட்டுச் சென்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை காலை திருப்பூா் இந்து சமய அறநிலையத்துறையின் துணை ஆணையா் ஹரிணி தலைமையில் இந்துசமய அறநிலையத்துறையினா் வெண்ணைமலையில் உள்ள கோயில் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த 5 கடைகளுக்கு சீல் வைத்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து முன்னாள் கிராம நிா்வாக அலுவலா் காமராஜ் தலைமையில் 15 போ் கரூா்-வேலாயுதம்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். மேலும் சிலா் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அவா்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடா்ந்துமறியலில் ஈடுபட்ட 15 பேரையும் போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.