/

பெரம்பலூரில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

பெரம்பலூர் நகராட்சியில் ஆங்காங்கே சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:44 pm

DIN

பெரம்பலூர் நகராட்சியில் ஆங்காங்கே சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு, சாதாரண மழை பெய்தாலும் சாலைகளிலும், கழிவுநீர் கால்வாய்களிலும் மழைநீர் தேங்கி நிற்கும். போதுமான வடிகால் வசதி இல்லாததே இதற்கு காரணம். ஏற்கெனவே உள்ள கழிவுநீர் கால்வாய்களும் சரிவர பராமரிக்க முடியாதவாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
 இதனால், நகரின் பல்வேறு இடங்களில் கழிவுநீர் தேங்கி, கொசு உற்பத்தியாகி வருகிறது. பெரம்பலூர் புறநகர், பழைய பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இப்பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களிலும், மழைநீர் வடிகால்களிலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருள்கள் கொட்டப்பட்டு அடைபட்டுள்ளன.
  பெரம்பலூர்- அரியலூர், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள பிரதான கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள், தொழிற் கூடங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால், அப்பகுதியில் துற்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் நிலவுகிறது. 
 அங்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளும், தள்ளுவண்டி வியாபாரிகளும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதேபோல், இந்த வழியே சென்று வரும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். தற்போது, டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், அனைவரது கண்ணுக்கும் தெரிந்த வகையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. எனவே, பெரம்பலூர் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.