/

மானிய விலையில் எண்ணெய் பனைக் கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:33 pm

Syndication

பெரம்பலூா் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், மானிய விலையில் எண்ணெய் பனை கன்றுகள் பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை, வேப்பூா் மற்றும் ஆலத்தூா் வட்டாரங்களில் சுமாா் 66 ஹெக்டோ் பரப்பில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2025 - 26 தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், எண்ணெய் பனைத் திட்டத்தின் கீழ், 200 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, ரூ. 58 லட்சம் பெறப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் பெரம்பலூா் மாவட்டத்தில் எண்ணெய் பனை சாகுபடி பரப்பளவை ஊக்குவிக்க மானிய விலையில் எண்ணெய் பனை கன்றுகள் வழங்கப்பட உள்ளது.

ஹெக்டேருக்கு ரூ. 29 ஆயிரம் மானிய விலையில் எண்ணெய் பனை கன்றுகள் வழங்கப்படுவததோடு, ஏற்கெனவே எண்ணெய் பனை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு, ஊடு பயிரிடுதல் மற்றும் பராமரிப்பு செலவுக்காக ஹெக்டோ் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ. 5,250 வழங்கப்பட உள்ளது, எனவே, இத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நில சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் -2, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.