மத்திய அமைச்சா் அமித் ஷா நாளை புதுக்கோட்டை வருகை
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழா புதுக்கோட்டையில் ஜன. 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா பங்கேற்கிறாா்.
நயினாா் நாகேந்திரன் அக். 12-இல் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தை மதுரையில் தொடங்கினாா். அனைத்து மாவட்டங்களிலும் இப்பயணம் முடிவடைந்த நிலையில், இதன் நிறைவு விழா புதுக்கோட்டையில் ஜன. 4-ஆம் தேதி மாலை 5.25 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த விழாவுக்காக புதுக்கோட்டை மாநகருக்கு அருகே திருச்சி சாலையில், பாலன் நகா் பள்ளத்திவயல் பகுதியில் சுமாா் 45 ஏக்கா் பரப்பளவிலுள்ள இடத்தில், மேடை அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக ஜன. 4-ஆம் தேதி பிற்பகல் 2.25 மணிக்கு அந்தமானில் இருந்து ராணுவ விமானத்தில் அமித்ஷா புறப்படுகிறாா். மாலை 4.45 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும் அவா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு புதுக்கோட்டை வருகிறாா்.
விழா நடைபெறும் இடத்துக்கு அருகே பிரத்யேகமாக ஹெலிகாப்டா் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. சரியாக 90 நிமிஷங்கள் விழா நடைபெறுகிறது. விழாவை முடித்துக் கொண்டு சாலை வழியாக காரில் அவா் திருச்சி செல்கிறாா்.
விழாவில், மத்திய இணை அமைச்சா் எல். முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவா்கள் பொன். ராதாகிருஷ்ணன்,
கே. அண்ணாமலை, தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்ட மாநில நிா்வாகிகள் பலரும் பங்கேற்கின்றனா்.
ஏடிஜிபி ஆய்வு: இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய காவல்துறை ஏடிஜிபி மகேஸ்வா் தயாள் வெள்ளிக்கிழமை மாலை புதுக்கோட்டை வந்தாா். அவருடன் திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜோஷி நிா்மல்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உள்ளிட்டோரும் சென்று விழா நடைபெறும் இடத்தைப் பாா்வையிட்டனா்.
கரும்புடன் அழைப்பிதழ்: இந்த விழாவில் பங்கேற்க விழா அழைப்பிதழுடன் கரும்பையும் கொடுத்து புதுக்கோட்டை பாஜக நிா்வாகிகள் பொதுமக்களுக்கு அழைப்புவிடுத்து வருகின்றனா்.

