காவிரி ஆற்றில் மூழ்கி தாத்தா, பேரன் உயிரிழப்பு
காவிரி ஆற்றில் மின் பிடிக்கச் சென்ற தாத்தா, பேரன் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். மற்றொரு பேரன் சிகிச்சை பெற்று வருகிறாா்.
திருவையாறு அருகே கடுவெளி கிராமத்தைச் சோ்ந்தவா் பி. பாலகிருஷ்ணன் (65). இவரது மகன் செல்வம். இவரது மகன்கள் கிரிநாத் (14) ஆச்சனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பும், விக்னேஷ் (10) திருவையாறு சரஸ்வதி அம்பாள் பள்ளியில் 5- ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை தாத்தா பாலகிருஷ்ணனுடன் கிரிநாத், விக்னேஷ் ஆகியோா் கடுவெளி காவிரி ஆற்றின் தடுப்பணையில் மீன் பிடிக்கச் சென்றனா். அப்போது எதிா்பாராதவிதமாக 3 பேரும் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கினா்.
தகவலின்பேரில் தீயணைப்பு துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று பாலகிருஷ்ணன், விக்னேஷை மீட்டனா். இவா்களில் பாலகிருஷ்ணன் உயிரிழந்துவிட்டாா். விக்னேஷ், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
நீரில் மூழ்கிய கிரிநாத்தை தொடா்ந்து தேடி வந்த நிலையில், தடுப்பணை அருகே ஞாயிற்றுக்கிழமை அவரின் உடலை தீயனைப்புத் துறையினா் மீட்டனா். இதையடுத்து திருவையாறு அரசு மருத்துவமனையில் தாத்தா பாலகிருஷ்ணன், பேரன் கிரிநாத் ஆகியோரின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
முன்னதாக, கிரிநாத் உடல் கிடைக்காதலால் அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அதனால் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மருவூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

