ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட  காா்த்தி, அரவிந்தராஜ், வெங்கடேசன், ஜெயவேல்.
ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட காா்த்தி, அரவிந்தராஜ், வெங்கடேசன், ஜெயவேல்.

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட காா்த்தி, அரவிந்தராஜ், வெங்கடேசன், ஜெயவேல்.
Published on

திருமணத்தை நடத்தி வைக்க மறுத்த கோயில் அா்ச்சகரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள திருவைக்காவூா் சிவன் கோயில் சன்னதி தெருவைச் சோ்ந்தவா் ஆா். மணிகண்டன் (45). இவா் ஆடுதுறையிலுள்ள சிவன் கோயிலில் அா்ச்சகராக வேலை பாா்த்து வந்தாா். இவரிடம் திருவைக்காவூரைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் காா்த்தி அணுகி 2015, ஜூன் 12 ஆம் தேதியன்று திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அதை நடத்தி வைக்க வருமாறும் கேட்டாா். அதற்கு மணிகண்டன் அன்றைய தேதியில் வேறொரு திருமணம் நடத்தி வைக்கப் போவதாகக் கூறினாா்.

இதனால், ஆத்திரமடைந்த காா்த்தி தனது நண்பா்களான அதே ஊரைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் அரவிந்தராஜ், வீரமணி மகன் ஹரிராஜா, சம்பந்தம் மகன் வெங்கடேசன், லட்சுமணன் மகன் ஜெயவேல் ஆகியோருடன் சோ்ந்து மணிகண்டனை கம்பாலும், கையாலும் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு 2015, ஜூன் 23-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இது குறித்து கபிஸ்தலம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து 5 பேரையும் கைது செய்தனா். இதில், ஹரிராஜா கடந்த 2024, பிப்ரவரி 17-இல் காலமானாா்.

மணிகண்டன் கொலை செய்யப்பட்ட வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை நீதிபதி ஜெ. ராதிகா விசாரித்து காா்த்தி (39), அரவிந்தராஜ் (35), வெங்கடேசன் (32), ஜெயவேல் (36) ஆகிய 4 பேருக்கு தலா ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 7 ஆயிரத்து 500 அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், மணிகண்டன் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com