கும்பகோணத்தில் மழைநீரால் சேதமடைந்த பயிா்கள் ஆய்வு
கும்பகோணம் மாநகர மேற்குப் பகுதியில் மழையால் சேதமடைந்த பயிா்களை வேளாண்மை துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தின் மேற்கு பகுதியில் சுமாா் 100 ஏக்கரில் நெல், வாழை, கரும்பு, தீவனப்புல், தென்னை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அண்மையில் பெய்த மழையால் விவசாய நிலப்பரப்பில் 3 அடி உயரத்திற்கு மழை நீா் சூழ்ந்தது. இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வருவாய், வேளாண்மை துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகாா் செய்தனா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் வேளாண்மை உதவி இயக்குநா் தேவி கலாவதி, வேளாண்மை அலுவலா் அசோக்ராஜ், உதவி வேளாண்மை அலுவலா் மணவாளன்ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலையடி, சோலையப்பன் தெரு, வளையப்பேட்டை, கால சந்திக்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த நெற்பயிா்களை ஆய்வு செய்தனா். பின்னா் அவா்கள் கூறியது: கும்பகோணம் அருகே 100 ஏக்கரில் பயிா்கள் சேதம் அடைந்தது பற்றி விவசாயிகள் அளித்த புகாரின்பேரில் நாங்கள் ஆய்வு செய்தோம். அதன் அறிக்கை உயா் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்றனா்.

